/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேட்பாளர், எம்.பி., - எம்.எல்.ஏ., ஓட்டுப்பதிவு
/
வேட்பாளர், எம்.பி., - எம்.எல்.ஏ., ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 07:52 AM
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில், மொத்த வாக்காளர், 16,58,681 பேர். இவர்களில் ஆண்கள், 8,28,152; பெண்கள், 8,30,307; திருநங்கையர், 222 பேர். இதில் ராணுவத்தில் பணிபுரியும் 588 பேர் சேர்க்கப்படவில்லை. போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள், 25 பேர். கடந்த, 17 மாலை, 6:00 மணிக்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்கு, 1,766 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தல் பணியில், 7,319 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
ஓட்டுப்பதிவு தொடங்கியதும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். குறிப்பாக இளம் வாக்காளர்கள், முதல் முறையாக ஓட்டுப்போட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்மூலம் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதை உணர்வதாக, அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், அவரது மனைவி ரஞ்சிதம், சேலம் கோகுலநாதா இந்து மகாஜன பள்ளியில் ஓட்டுப்போட்டனர். சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அவரது மனைவி சுசிலா, மகள் கார்த்திகா, சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டனர்.
தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, அவரது மனைவி பாப்பு, சேலம் ஸ்ரீசாரதா பாலமந்திர் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஓட்டுப்போட்டனர். தி.மு.க.,வை சேர்ந்த சிட்டிங் எம்.பி., பார்த்திபன், அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் தயாநிதி, நிரஞ்சன், சேலம் பெரியபுதுார், அரசு நடுநிலைப்பள்ளியில் ஓட்டை பதிவு செய்தனர். மேலும் வாக்காளர்கள் குடும்பம் சகிதமாக வருகையால் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை முதல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது.
அ.தி.மு.க., வேட்பாளர்
ஓமலுார் அருகே திண்டமங்கலத்தை சேர்ந்த, சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ், அவரது மனைவி ப்ரியாவுடன், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஓட்டை பதிவு செய்தார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, வேடப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மனைவி சுதா உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று ஓட்டை பதிவு செய்தார்.

