/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குந்து காய்ச்சலால் மாடுகள் பாதிப்பு
/
குந்து காய்ச்சலால் மாடுகள் பாதிப்பு
ADDED : மே 14, 2024 08:09 PM
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் வட்டத்தில் காமலாபுரம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, பாலிக்கடை, சிக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அப்பகுதிகளில், 50,000க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கோடை காலத்தில் வெப்பத்தால் கால்நடைகள், நோய்களால் பாதிக்கப்படும். தற்போது பசு கிடாரிகளை தாக்கும், 'குந்து' காய்ச்சல் பரவி வருகிறது.
இதுகுறித்து காமலாபுரம் கால்நடை மருத்துவர் கோபி கூறியதாவது:
இது ஒரு வைரஸ் காய்ச்சல். ஈக்கள் மூலம் மாடுகளுக்கு மட்டும் பரவக்கூடியது. இந்த காய்ச்சல், 3 நாட்கள் இருக்கும். 3ம் நாளில் மாடுகள் கால் ஊன்ற முடியாமல் நொண்டி நிற்கும் அல்லது படுத்துக்கொள்ளும். இதனால் தான், 'குந்து' நோய் எனப்படுகிறது.
இந்த நோயால், 1,000 மாடுகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சாதாரண காய்ச்சல் மாத்திரை வழங்கினால் போதும். ஈக்களை கட்டுப்படுத்த டெல்டாமெத்ரின், சைபர் மெத்ரின் மருந்துகளை தண்ணீரில் கலந்து, கொட்டகையில் தெளிக்கலாம். விபரம் பெற அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

