ADDED : ஆக 07, 2024 10:55 PM
மேட்டூர்:தமிழக மின் உற்பத்தி அமைப்புகள் வாயிலாக, 19,064 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். கடந்த, 28ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 109 அடியாக உயர்ந்ததால் டெல்டா பாசனத்துக்கு, 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், 50 மெகாவாட் திறன் அணை; 200 மெகாவாட் திறன் சுரங்கம்; காவிரி குறுக்கே கட்டியுள்ள தலா, 30 மெகாவாட் திறன் கொண்ட, 7 கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கியது.
கடந்த, 28ல் அணை, கதவணை மின் உற்பத்தி, 180 மெகாவாட்டாக இருந்தது. 30 மாலை டெல்டா பாசன நீர் திறப்பு, 21,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒரு வாரமாக அணை, சுரங்க மின் நிலையங்களில், 250 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில் தலா, 22 மெகாவாட் வீதம், 154 என மொத்தம், 404 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது.
நேற்று அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப அணை மின் நிலையங்களில், 100, கதவணை மின் நிலையங்களில், 56 என மின் உற்பத்தி, 156 மெகாவாட்டாக குறைந்தது.
தமிழக நீர் மின் நிலையங்கள் வாயிலாக, 2,322 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். டெல்டா நீர் திறப்பு குறைந்ததால் நேற்று அணை, கதவணை மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்தது. அதற்கேற்ப கடந்த, 5ல், 1,025 மெகாவாட் ஆக இருந்த நீர்மின் உற்பத்தி நேற்று முன்தினம், 934 மெகாவாட், நேற்று, 869 மெகாவாட் ஆக சரிந்தது.