UPDATED : செப் 09, 2024 07:03 AM
ADDED : செப் 09, 2024 07:02 AM
வீரபாண்டி: சேலம், வீரபாண்டி காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு இரு வகுப்பறை கட்டடங்கள், சமையற்கூடம் உள்ளன. 2004ல், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக இரு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2010ல் பள்ளி கட்டட சீரமைப்பு திட்டத்தில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி நடந்தது. அதற்கு பின் பராமரிப்பு செய்யப்படவில்லை.
இதனால் வகுப்பறை மேற்கூரை, சுவர், ஜன்னல் தாழ்வாரம் என, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது. குறிப்பாக பழைய வகுப்பறை கட்டடங்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள், கல்வித்துறைக்கும், வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். அதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் ஆய்வு செய்து, பராமரிப்பு உள்ளிட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.