/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளை நாவல் அறிமுகம் நல்ல மகசூலால் மகிழ்ச்சி
/
வெள்ளை நாவல் அறிமுகம் நல்ல மகசூலால் மகிழ்ச்சி
ADDED : மே 28, 2024 10:09 PM
பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10,000 ஏக்கரில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டக்கலை சார்பில் செடி வகை அத்தி, வியட்நாம் குட்டை ரக பலா, வெண்ணை பழம், கோல்டன் சீதா, உள்ளிட்ட புது ரக பயிர்கள் சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் செடி வகை வெள்ளை நாவல், சோதனை முயற்சியாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதை பயிரிட்டுள்ள, காளியாகோவில்புதுாரை சேர்ந்த பிரேம்குமார், 38, கூறுகையில், 'கறுப்பு நாவல் சாகுபடி செய்து, 3 ஆண்டாக விற்று வருகிறேன். தற்போது புது வெள்ளை நாவல் நடவு செய்து, 2ம் ஆண்டில் மகசூல் கிடைத்தது. முதன்முதலில் கடந்த ஆண்டு ஒரு செடியில், 20 கிலோ மகசூல் கிடைத்தது. வெள்ளை நாவல் பழத்தை, மக்கள் ஆச்சரியமாக பார்த்து ஓரிரு பழத்தை ருசி பார்க்கின்றனர்,' என்றார்.
பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறுகையில், 'கறுப்பு நாவல் பழத்தை விட, வெள்ளை நாவல் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. இந்த விதைகள், சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த செடி வகை நாவல் குட்டையாக வளரும் என்பதால் எளிதில் அறுவடை செய்யலாம். சந்தை வாய்ப்பை உருவாக்கிய பின் அதற்கேற்ப சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். விபரம் பெற, பனமரத்துப்பட்டி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்,' என்றார்.