/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.60 கோடி சொத்தை அபகரித்தவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி சேலத்தில் தேடப்பட்டு வருபவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
/
ரூ.60 கோடி சொத்தை அபகரித்தவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி சேலத்தில் தேடப்பட்டு வருபவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ரூ.60 கோடி சொத்தை அபகரித்தவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி சேலத்தில் தேடப்பட்டு வருபவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ரூ.60 கோடி சொத்தை அபகரித்தவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி சேலத்தில் தேடப்பட்டு வருபவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : நவ 29, 2024 11:45 PM
சேலம்:போலி உயில் ஆவணத்தை பதிவு செய்து, 60 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த வழக்கில், முதன்மை குற்றவாளியாக தேடப்பட்டு வருபவரின் முன்ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் சர்மா, 70; அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே 'செட்டில்' ஆனவர்.
இவரது தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாகவும், மாமனார் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவும் பணியாற்றி மறைந்தவர்கள்.
கடந்தாண்டில் அமெரிக்காவிலிருந்து சேலம் வந்த நாகராஜ் சர்மாவுக்கு, அவருக்குரிய பூர்வீக சொத்துக்களில், 60 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்காட்டிலுள்ள மிளகு, காபி எஸ்டேட், வீடு உள்ளிட்ட சில சொத்துக்கள், போலி ஆவணங்களின் வாயிலாக அபகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
திடுக்கிட்ட இவர், போலி ஆவண மோசடி நடந்திருப்பது சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் என்பதால், மாநகர போலீசில் புகார் அளித்தார்.
மோசடியாக செருகி
அதில், தன் தந்தை சுப்பா ராவின் இளைய சகோதரர் ஹனுமந்த் ராவ், தனக்கு வாரிசுகள் இல்லாததால் ஏற்காடு, ஓமலுார் மற்றும் மேட்டூர் அணை பகுதியிலுள்ள தன் சொத்துக்களை, தன்னுடன் பிறந்த சகோதரர்களான சேஷகிரி ராவ், சுப்பா ராவ் ஆகியோருக்கு பிரித்து வழங்குவதாக 2005ல் உயில் எழுதியுள்ளார்.
இந்நிலையில், 1972ம் ஆண்டிலேயே ஹனுமந்த ராவ் எழுதி வைத்ததாகக் கூறி, போலி உயில் ஒன்று தயாரிக்கப்பட்டு, சேலம் சார் - பதிவாளர் அலுவலக ஆவணங்களுக்கிடையே மோசடியாக செருகி இணைக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
மேலும் இதை, பதிவுத்துறை அலுவலர்கள் துணையோடு, ஹனுமந்த ராவின் சகோதரி மகன் சுதர்சன், 70, உள்ளிட்டோர் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதே வேளையில், இவ்விவகாரத்தை கிளற வேண்டாமென, நாகராஜ் சர்மாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசியில் கொலை மிரட்டல் வரத் துவங்கின.
மிரட்டிய நபர்கள் சேலம் அரசியல் பிரமுகர், பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட பலரின் பின்புலத்தை கூறி, புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுத்தனர்; நாகராஜ் சர்மா பணியவில்லை.
நிபந்தனை
மாறாக, டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார். அதன்பின், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், நாகராஜ் சர்மாவின் உறவினர் சுதர்சன் உள்ளிட்ட பலர் மீது கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ், செப்., 12ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமின் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதர்ஷன் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மனுவை தள்ளுபடி செய்து, சுதர்ஷனை சேலம் ஜே.எம்.எண் - 2ல் ஆஜராக உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நீதிமன்றத்தில் ஆஜரான பின் அல்லது போலீசாரால் கைது செய்யப்பட்ட பின், இரண்டு வாரங்களில் ஜாமின் வழங்கலாம்.
அதன்பின், நான்கு வாரத்துக்கு தினமும் காலை 10:30 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். அதன்பின், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஜராக வேண்டும்.
விசாரணையின் போது சாட்சிகளை சிதைக்கக்கூடாது; தலைமறைவாக இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை மீறினால், ஜாமின் ரத்து செய்யப்பட வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் முடிவு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி கூறுகையில், “இவ்வழக்கில் சுதர்ஷன் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை; தேடி வருகிறோம்,” என, முடித்துக் கொண்டார்.