/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய 'குடி'மகன் கைது
/
தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய 'குடி'மகன் கைது
ADDED : மே 30, 2024 01:55 AM
சேலம்:சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி, ஈச்சங்காட்டூரை சேர்ந்தவர் காளியப்பன், 77. இவரது மனைவி அலமேலு, 65. இவர்களது மகன் சீனிவாசன், 39. இவர், மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு, தந்தையை தொந்தரவு செய்து வந்தார்.
கடந்த, 26ல் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்ற நிலையில், காளியப்பனும், சீனிவாசனும் மட்டும் வீட்டில் இருந்தனர். இரவு, 7:30 மணிக்கு, குடும்பத்தினர் வந்தபோது, காளியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
தந்தை கட்டிலில் இருந்து தடுமாறி விழுந்ததால், தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து விட்டதாக சீனிவாசன் தெரிவித்தார். ஆனால், காளியப்பனின் பற்கள் உடைந்து இருந்ததால், கருப்பூர் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், காளியப்பன் தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், நேற்று காலை, சீனிவாசனை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், சொத்து கேட்டு நடந்த தகராறில், தந்தையை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.