/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரிவாளால் வெட்டி தந்தை படுகொலை சொத்து பிரச்னையில் மகன் அட்டூழியம்
/
அரிவாளால் வெட்டி தந்தை படுகொலை சொத்து பிரச்னையில் மகன் அட்டூழியம்
அரிவாளால் வெட்டி தந்தை படுகொலை சொத்து பிரச்னையில் மகன் அட்டூழியம்
அரிவாளால் வெட்டி தந்தை படுகொலை சொத்து பிரச்னையில் மகன் அட்டூழியம்
ADDED : ஏப் 04, 2024 04:49 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவை சேர்ந்த, கட்டட தொழிலாளி கருப்பண்ணன், 69. இவர் ஆடு மேய்க்கும் வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள், 68, மகன் ராஜா, 40, மகள் சந்திரா, 35. தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையில் மாரியம்மாள், ராஜா ஆகியோர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் வசிக்கின்றனர். ராஜாவுக்கு, மாலதி, பவுனாம்பாள் என, இரு மனைவிகள் உள்ளனர். மாலதியுடன் கருத்து வேறுபாடால், இரண்டாவது மனைவியுடன் உள்ளார்.
மாலதியின் மகன் சங்கருக்கு, தாத்தா கருப்பண்ணன், சொத்து எழுதி தருவதாக கூறியுள்ளார். இதையறிந்த ராஜா, கருப்பண்ணனுடன் சில மாதங்களாக தகராறு செய்து, 'எனக்கு சொத்தை எழுதி வைக்க வேண்டும்' என வாக்குவாதம் செய்துள்ளார். 2 வாரங்களுக்கு முன், தனியார், 'டிவி'யில் நடந்த, 'வாழ்ந்து காட்டுவோம்' நிகழ்ச்சியில் கருப்பண்ணன், மனைவி, மகன், மகள் பங்கேற்று குடும்ப பிரச்னையை கூறினர். அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ, சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்த கருப்பண்ணனிடம், ராஜா, சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜா, கருப்பண்ணனை, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தார். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், உடலை கைப்பற்றினர். ராஜா, மாரியம்மாள் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

