/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கனமழை: சுற்றுலா பயணியர் ரசிப்பு
/
ஏற்காட்டில் கனமழை: சுற்றுலா பயணியர் ரசிப்பு
ADDED : மே 20, 2024 02:08 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசாக வெயில் தென்பட்டது. ஆனால் மதியம், 1:20 மணிக்கு இடியுடன் மழை பெய்ய தொடங்கி, 3:30 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மாலை, 6:45 மணி வரை சாரல் மழையாக பெய்தது. அதேநேரம் ஏற்காட்டில், வரும், 22 முதல், 26 வரை கோடைவிழா, மலர் கண்காட்சி நடக்க உள்ள நிலையில், சுற்றுலா பயணியர் ஏராளமானார் நேற்று குவிந்தனர். அவர்கள் மழையை ரசித்தபடி, அங்குள்ள பூங்காக்களை சுற்றிப்பார்த்தனர். பலர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மழையால், ஏற்காடு வரும் மலைப்பாதை ஓரத்தில் திடீர் அருவிகள், சாலையில் மழைநீர் ஓடியது. அப்போது ஏற்காடு வந்த சுற்றுலா பயணியர் சிலர், மழையில் நனைந்தபடி ஆபத்தை உணராமல் அருவியில் குளித்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், போலீஸ், வனத்துறையினர், திடீர் அருவிகளில் சுற்றுலா பயணியர் குளிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணியர் எண்ணிக்கை குறைவு
விடுமுறை நாளான நேற்று மேட்டூர் அணை பூங்காவை, 8,212 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். இதுதவிர பவளவிழா கோபுரத்தில் ஏறி, 432 பயணியர், மின்துாக்கியில், 123 பயணியர், அணையை பார்வையிட்டனர். இதன்மூலம் பொதுப்பணித்துறைக்கு, 45,680 ரூபாய் நுழைவு கட்டணமாக கிடைத்தது. மேலும் நேற்று மதியம், 2:15 முதல், ஒரு மணி நேரம் மேட்டூரில் கோடை மழை பெய்ததால், பூங்காவுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை குறைந்தது.
அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், கல்லாநத்தம், ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 12:00 மணிக்கு சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து, 2:00 மணிக்கு கன மழை கொட்டியது. மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, சாரல் மழையாக பெய்தது.
நிரம்பிய தடுப்பணை
வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் ஒரு வாரமாக மழை பெய்தது. குறிப்பாக கோதுமலை பகுதியில் நேற்று மதியம், 12:30 முதல், 3:00 மணி வரை கனமழை கொட்டியது. இதனால் கோதுமழை வனப்பகுதியில் உள்ள, 10 தடுப்பணைகளும், 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கழிவுநீருடன் தேங்கிய மழைநீர்
வாழப்பாடி, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து. மதியம், 1:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்து, ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பும், போலீஸ் ஸ்டேஷன் முன்பும், கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கியது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. வாழப்பாடி பகுதியில் சாக்கடை கால்வாயை முறையாக துார்வார, மக்கள் வலியுறுத்தினர்.

