/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் விதிமுறை அமல்: ஜவுளி விற்பனை பாதிப்பு
/
தேர்தல் விதிமுறை அமல்: ஜவுளி விற்பனை பாதிப்பு
ADDED : மார் 22, 2024 02:02 AM
பள்ளிப்பாளையம்;தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், பள்ளிப்பாளையம் பகுதியில் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் பிரதானமாக விசைத்தறி தொழில் உள்ளது. இதில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு ஜவுளி சந்தை வழியாக இந்தியா முழுதும் விற்பனைக்கு செல்லும். வடநாட்டு வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், ஜவுளி விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பள்ளிப்பாளையம் ஆற்றுபாலம் பகுதியில், தேர்தல் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆவணம் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் பணத்தை கொண்டு வருவதற்கு, பள்ளிப்பாளையம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் அச்சமடைகின்றனர். மேலும் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதால், விற்பனையும் குறைந்துள்ளது. தேர்தல் முடியும் வரை விசைத்தறி தொழில் தொய்வு நிலையில் தான் காணப்படும்.

