/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடிப்பெருக்கில் மேட்டூர் காவிரி 'வெறிச்'
/
ஆடிப்பெருக்கில் மேட்டூர் காவிரி 'வெறிச்'
ADDED : ஆக 03, 2024 11:12 PM
மேட்டூர்:ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கில், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், மேட்டூர் வந்து காவிரியாற்றில் நீராடி வழிபடுவர். ஆனால் நடப்பாண்டு, மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால், அசம்பாவிதத்தை தவிர்க்க, ஆடிப்பெருக்கான நேற்று, காவிரியாற்றில் பல்வேறு பகுதிகளில் நீராட, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
குறிப்பாக மக்கள் அதிகளவில் நீராடும் மட்டம் பகுதி, கொளத்துார் நீரேற்று நிலையம், எம்.ஜி.ஆர்., பால அடிவாரம் ஆகிய இடங்களில் தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள், அணை அடிவாரம் உள்ள விநாயகர் கோவில் படித்துறை, எம்.ஜி.ஆர்., பாலம் முனியப்பன் கோவில் அருகிலுள்ள படித்துறைக்கு மட்டும் சென்று நீராட அனுமதிக்கப்பட்டனர். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடவும் தடை விதிக்கப்பட்டது.
மக்கள் நீராட அனுமதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு, மீட்பு குழுவினர் கயிறு கட்டியும், பைபர் படகில் சென்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் வழக்கம்போல் காவிரியில் நீராட வந்த மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேநேரம் வழக்கமானதை விட, மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே நேற்று மேட்டூர் வந்தனர். ஒர்க்ஷாப் கார்னர், காவிரி பாலம், அணை பூங்கா முன்பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கூட்டமின்றி வெறிச்சோடின.