/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக சரிவு
ADDED : ஆக 03, 2024 12:33 AM
மேட்டூர்:மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1.30 லட்சம் கன அடியாக சரிந்த நிலையில் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதால் கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இரு நாட்களாக, அணைக்கு வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் வந்த நிலையில் அப்படியே வெளியேற்றப்பட்டது.
ஆனால், நேற்று மாலை, 4:00 மணிக்கு அணை நீர்வரத்து, 1.30 லட்சம் கன அடியாக குறைந்தது. இதனால், 16 கண் மதகு வழியே, 1.08 லட்சம் கன அடி உபரி நீர், அணை மின் நிலையங்கள் வழியே, 21,500 கனஅடி, கால்வாயில், 500 கனஅடி என, 1.30 லட்சம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.
நாய்க்கு 'டிரோன்' மூலம் உணவு
கடந்த, 30ல் மேட்டூர் அணை, 16 கண் மதகு முன் உள்ள பாறைகள் இடையே, இறந்து கிடந்த மீன்களை சாப்பிட ஒரு நாய் சுற்றித்திரிந்தது. அப்போது உபரிநீர் திறப்பால் தண்ணீர் சூழ்ந்து, அந்த கறுப்பு நிற நாய் அங்கிருந்து செல்ல முடியாமல் பாறையில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்து வீடியோ பரவியதால் நேற்று சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அந்த நாய்க்கு உணவு வழங்கி மீட்க, மேட்டூர் தீயணைப்புத்துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்படி தீயணைப்பு வீரர்கள், 'டிரோன்' மூலம் நாய் இருந்த இடத்தில் உணவை போட்டனர். நீர்வரத்து சற்று குறைந்ததும், நாயை மீட்கும் பணி நடக்கும் என, வீரர்கள் தெரிவித்தனர்.