/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
/
100 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
ADDED : ஜூலை 28, 2024 03:02 AM

மேட்டூர்:மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., ஆகும். கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகமாக திறந்து விடப்படும் உபரி நீரால், மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை, 9:15 மணிக்கு, 71வது முறையாக அணை நீர்மட்டம், 100 அடியை எட்டியது. அப்போது தண்ணீர், 16 கண் மதகு ஷட்டரை தொட்டது. மாலை, 4:00 மணிக்கு நீர்வரத்து, 1.18 லட்சம் கன அடியாக உயர்ந்தது. நீர்மட்டம், 101.70 அடி, நீர் இருப்பு, 67.06 டி.எம்.சி.,யாக இருந்தது.
சில தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது மாவட்ட கலெக்டர்களுக்கு, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பிஉள்ளார்.
அடம்பிடித்த எம்.எல்.ஏ.,
மேட்டூர் அணை நீர்மட்டம், 100 அடியை எட்டியதால், 16 கண் மதகு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் பூஜை செய்தனர். இதில் பங்கேற்க மேட்டூர் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர் வரும்முன் நீர்மட்டம், 100 அடியை எட்டியதால் அதிகாரிகள் பூஜையை முடித்தனர்.
இதனால் கோபமடைந்த சதாசிவம் மேட்டூர் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டார். போலீசார், பொறியாளர்கள், எம்.எல்.ஏ.,வுடன் பேச்சு நடத்தினர். அரை மணி நேர சமாதானத்திற்குப் பின், 16 கண் மதகின் மேற்குப் பகுதிக்கு சென்ற சதாசிவம், அங்கு பூஜை செய்து, மலர் துாவி வணங்கிவிட்டு கிளம்பினார்.
சதாசிவம் கூறுகையில், ''பிளான் பண்ணி என்னை அவமதித்து விட்டனர். அந்த கோபத்தில் மறியலில் ஈடுபட்டேன். நான், 'ஸ்டன்ட்' அடிக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை,'' என்றார்.