ADDED : மே 24, 2024 10:14 PM
இடைப்பாடி:குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவரின் மனைவி, அவரது இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா புள்ளாகவுண்டம்பட்டி அருகே வினோபாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோகுல், 30. அதே பகுதியை சேர்ந்தவர் சுகமதி, 24. இருவரும், 7 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ, 6, ரிஷ்மிகா, 2, என, இரு குழந்தைகள் இருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு, ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சுகமதி கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை, வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் அருகே வசிக்கும் சுகமதியின் தந்தை பாபு சென்று பார்த்தபோது, சுகமதி, அவரது குழந்தைகள் ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர் தகவல்படி, தேவூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தொடர்ந்து சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு மாதத்துக்கு முன் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்றதை திருப்பி செலுத்துவது தொடர்பாக, மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் சுகமதி, கோகுலை அடித்ததாகவும், அதனால் அவர் கோபித்துக்கொண்டு அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இருப்பினும் சுகமதி, மொபைல் போனில் கோகுலை தொடர்பு கொண்டார். அவர், போனை எடுக்கவில்லை. இதில் விரக்தி அடைந்த சுகமதி, விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இவ்வாறு கூறினர்.

