/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் உபரிநீர் ஏற்றும் திட்டத்தில் முதல் முறை நிரம்பிய நங்கவள்ளி ஏரி
/
மேட்டூர் உபரிநீர் ஏற்றும் திட்டத்தில் முதல் முறை நிரம்பிய நங்கவள்ளி ஏரி
மேட்டூர் உபரிநீர் ஏற்றும் திட்டத்தில் முதல் முறை நிரம்பிய நங்கவள்ளி ஏரி
மேட்டூர் உபரிநீர் ஏற்றும் திட்டத்தில் முதல் முறை நிரம்பிய நங்கவள்ளி ஏரி
ADDED : ஆக 04, 2024 09:12 PM
நங்கவள்ளி:மேட்டூர் உபரிநீர் ஏற்றும் திட்டத்தில், முதல்முறை நங்கவள்ளி ஏரி நிரம்பியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த, 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில், மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பிரமாண்ட குழாய்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளை நிரப்பும் திட்டம், திப்பம்பட்டியில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஏற்கனவே எம்.காளிப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
நங்கவள்ளி ஏரியை நிரப்ப, திப்பம்பட்டியில் இருந்து, 11 கி.மீ.,க்கு குழாய் பதிக்கும் பணி நடந்தது. நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட சிக்கலால் தாமதம் ஏற்பட்டு, 2024 ஜனவரியில்தான் பணி முடிந்தது. அப்போது திப்பம்பட்டி தொட்டியில் உபரிநீர் இல்லாததால், சோதனை ஓட்டம் நடக்கவில்லை. தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், கடந்த, 2ல் திப்பம்பட்டியில் இருந்து நீரேற்றும் பணி தொடங்கியது.
ஆனால் பல இடங்களில், 'ஏர் லாக்' ஏற்பட்டு அவற்றை சரிசெய்யவும் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து நீரேற்றும் பணி நடந்ததால் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு ஏரிக்கு உபரிநீர் வந்தது. அப்போது, நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள், மலர் துாவி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த, 5 ஏக்கர் ஏரியில், நேற்று காலை, 7:00 மணிக்கு கோடி விழுந்து நங்கவள்ளி சந்தை, சுடுகாடு வழியே வனவாசி ஏரிக்கு செல்ல அமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் வனவாசி ஏரியை பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து அந்த ஏரி நிரம்பி, சாணார்பட்டி, பனங்கொட்டை, எலவம்பட்டி, வேப்பனேரி, காட்டம்பட்டி ஆகிய ஏரிகளுக்கு உபரிநீர் செல்லும்.
இதனிடையே ஏரி கரையோரம், 10க்கும் மேற்பட்ட வீடுகள், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதற்கு டவுன் பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.