ADDED : மார் 12, 2025 08:26 AM
அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சேலம் மாவட்ட மையம் சார்பில் மனித சங்கிலி போராட்டம், போஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராணி தலைமை வகித்தார். அதில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைத்தல்; பெண்களுக்கு சிறப்பு அனுமதி, விதிமுறைகளை உருவாக்குதல்; காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை பதாகைகளை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலர் சுரேஷ், பொருளாளர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வழிப்பறி வழக்கில் மேலும் 4 பேர் கைது
சேலம்: சேலம், வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 37. சேலத்தில் உள்ள நகைக்கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரிடம் கடந்த, 8ல், மர்ம கும்பல், உயர் ரக மொபைல் போன், 2.5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். வீராணம் போலீசார் விசாரித்து, இருவரை கைது செய்தனர். அவர்கள் வாக்குமூலப்படி வீராணத்தை சேர்ந்த ரகு, 23, காரிப்பட்டி கி ேஷார்குமார், 21, மன்னார்பாளையம் இம்ரான், 23, அம்மாபேட்டை தமிழ், 23, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மொபைல் மீட்கப்பட்டது.
இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம்: இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட குழு சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலர் டார்வின் தலைமை வகித்தார். கல்லுாரி விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த கிச்சன் திட்டத்தை திரும்ப பெறுதல்; மாணவர்களின் உணவுப்படியை உயர்த்தி வழங்க கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட செயலர் பவித்திரன் பேசினார். மாவட்ட துணைத்தலைவர்கள் அபிராமி, கோகுல், மாவட்ட குழு உறுப்பினர் நவீன் உள்பட விடுதி மாணவர்கள் பங்கேற்றனர்.
மான்கறி விற்ற 3 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
சேலம்: சேலம் புறநகர் பகுதியான தேக்கம்பட்டியில், வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்தபோது, புள்ளிமான்களை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்றது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த வனத்துறையினர், பொட்டியபுரம் கோவிந்தன், 22, மதியழகன், 28, ஆகியோருக்கு தலா, 4 லட்சம், தேக்கம்பட்டி பிரகாஷ், 26, என்பவருக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
100 கர்ப்பிணியருக்கு வளைகாப்பு விழா
வீரபாண்டி: சமூக நலத்துறை மூலம், வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில் கர்ப்பிணியருக்கு வளைகாப்பு விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின் வீரபாண்டி ஒன்றிய செயலர் வெண்ணிலா தலைமை வகித்தார். வீரபாண்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி(பொ) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், 100 கர்ப்பிணியருக்கு பழம், துணி வகைகள், வளையல், தட்டுகள், குங்குமம் வழங்கப்பட்டன. தயிர், புளி, எலுமிச்சை உள்ளிட்ட, 5 வகை சாதங்கள் பரிமாறப்பட்டன. மேலும் கர்ப்பிணியர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள், மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்டன.
கொப்பரை விலை கிலோ ரூ.150
சேலம்: சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. 15,300 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை கிலோ, 134 முதல், 150 ரூபாய்; 2ம் தரம், 118 ரூபாய்க்கு விலைபோனது. இதன்மூலம், 21.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, கண்காணிப்பாளர் ரஞ்சித் தெரிவித்தார். கடந்த வாரம், முதல் தரம் கிலோ, 135 முதல், 145 ரூபாய்; இரண்டாம் தரம், 118 முதல், 120 ரூபாய் வரை விலைபோன நிலையில், இந்த வாரம் முதல் தர கொப்பரைக்கு சற்று கூடுதல் விலை கிடைத்துள்ளது.
பூங்கா, நீர்மோர் பந்தல் திறப்பு
பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு சிவசக்தி நகரில், 19 லட்சம் ரூபாயில் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி தளம் அடங்கிய பூங்கா அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமை வகித்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பூங்காவை திறந்து வைத்தார்.அதேபோல் டவுன் பஞ்சாயத்து சார்பில், மல்லுார் பஸ் ஸ்டாப்பில், நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலர் உமாசங்கர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.