/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதுப்பாளையத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்த மக்கள்
/
புதுப்பாளையத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்த மக்கள்
ADDED : மே 28, 2024 07:36 AM
இடைப்பாடி: இடைப்பாடி, அரசு போக்குவரத்து கழக மேலாளரை கண்டித்து கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை, இடைப்பாடியில் இயங்கி வருகிறது. இங்கு, 75க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக இருப்பவர் தமிழரசன். இவர், 'ஸ்பெஷல்' டிரிப் எனக்கூறி வார விடுமுறை நாட்களில் இங்குள்ள பஸ்களை வெளியூருக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதனால் வழித்தட ஊர்களில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலமுறை புகார் தெரிவித்தும், விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களில் செல்லும் பஸ்களை கிளை மேலாளர் தமிழரசன் நிறுத்தி வந்துள்ளார். அதேபோல், இடைப்பாடியில் இருந்து புதுப்பாளையம் வழியாக சேலம் செல்லும் அரசு பஸ்சை நேற்று முன்தினம் நிறுத்தியுள்ளனர். நேற்று அந்த பஸ் அங்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொங்கணாபுரம் போலீசார், அரசு போக்கு வரத்து கழக கிளை மேலாளர் தமிழரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சேலம் பணிமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசி, இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது என உயர் அதிகாரிகள் கூறியதையடுத்து பஸ் விடுவிக்கப்பட்டது.