/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்று வழிப்பாதை கேட்டு நடந்த மறியல் போராட்டம்
/
மாற்று வழிப்பாதை கேட்டு நடந்த மறியல் போராட்டம்
ADDED : மே 28, 2024 12:00 AM

ஆத்துார்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமம் வழியாக சேலம் -- விருதாச்சலம் அகல ரயில் பாதை செல்கிறது.
அதே பகுதியில், சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையும் செல்வதால், ரயில்வே பாதைக்கு மேல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் தேவியாக்குறிச்சி கிராமம் உள்ளது.
மற்றொரு வழிப்பாதையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த இரு வழிப்பாதையிலும், ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை பணிகளுக்காக, இரு மாதங்களுக்கு முன் மூடியது. இதனால், அப்பகுதி மக்கள் ரயில்வே பாதையை கடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாற்று வழிப்பாதை ஏற்படுத்தி தர வலியுறுத்தி, நேற்று காலை 7:00 மணிக்கு, சேலம் -- விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் அமர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தலைவாசல் தாசில்தார் அன்புச்செழியன், ஆத்துார்டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, 'ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்த பின், அனைவரும் கலைந்தனர்.
மக்கள் போராட்டம் காரணமாக, விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணியர் ரயில், காலை 7:40 மணியளவில் தலைவாசல் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. மக்கள் கலைந்து சென்ற பின், 8:05 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.