/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.200 கோடி மோசடி
/
இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.200 கோடி மோசடி
ADDED : மே 29, 2024 02:01 AM

சேலம்:திருப்பூர் மாவட்டம், கடையூரைச் சேர்ந்தவர் தீபக் திலக், 34. இவர், பெங்களூரை தலைமை இடமாக கொண்டு, 'பி.டி.எம்., குரூப் ஆப் கம்பெனி' எனும் பெயரில் நிதி நிறுவனத்தை துவக்கினார்.
சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரியில் கிளைகளை துவக்கினார். '8,000 - 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், 20 மாதத்தில் முதலீடு தொகைக்கு இரட்டிப்பு பணம் வழங்கப்படும்' என கவர்ச்சி விளம்பரம் செய்தார்.
இதை நம்பி, தமிழகம்முழுதும் இருந்து, 4,000க்கும் மேற்பட்டோர் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
முதல் தவணை மட்டும் பணம் வழங்கிய நிலையில், இவர் மீது திருப்பூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
ஓராண்டாக பணம் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் சிலர் சேலம், பிருந்தாவன் சாலையில் உள்ள ஒரு கட்டடத்திற்கு அவரை வர வைத்தனர். அங்கு வந்த தீபக் திலக்கிடம், முதலீட்டை திரும்ப வழங்க கோரி, முதலீட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; அவரை முற்றுகையிட்டு தாக்க முயற்சித்தனர்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க கூட்டத்தில் இருந்து வெளியேறி, சாலையில் அமர்ந்து சத்தம் போட்டார்.
அழகாபுரம் போலீசார்,முதலீட்டாளர்களிடம் இருந்து தீபக் திலக்கை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தமிழகம் முழுதும், 4,000க்கும் மேற்பட்டோரிடம், 200 கோடி ரூபாய் முதலீடாக பெற்றதை, அந்த நபர் ஒப்புக் கொண்டார்.
அதையடுத்து, அவரை திருப்பூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.