/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சாய்பாபா கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை
/
சேலம் சாய்பாபா கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை
ADDED : மார் 09, 2025 02:54 AM
சேலம்: சேலம் அருகே சாய்பாபா கோவிலில் ஐம்பொன் சிலைகள், உண்டியல் பணம் உள்ளிட்டவை கொள்ளை போயின.
சேலம், அயோத்தியாப் பட்டணம், மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையோரம் சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு பூட்டப்பட்டது.
நேற்று காலை, 6:00 மணிக்கு, மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூஜாரி பிரபாகர், 35, கோவிலை திறக்க வந்தார். அப்போது, ஐம்பொன் சுவாமி சிலைகள் கொள்ளைபோனது தெரிந்தது. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கோவிலில், அரை அடி உயரத்தில் இருந்த, விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், துர்க்கை, வாராகி அம்மன் ஆகிய, ஐந்து ஐம்பொன் சிலைகள் கொளையடிக்கப்பட்டுள்ளன. தவிர 1.5 அடி உயரத்தில் இரு ஐம்பொன் வேல்கள், இரு மணிகள் மட்டுமின்றி, உண்டியலும் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போயுள்ளன.
இருவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.