/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு குடோனில் வெடி விபத்து சிவகாசி முதியவர் உடல் கருகி பலி
/
பட்டாசு குடோனில் வெடி விபத்து சிவகாசி முதியவர் உடல் கருகி பலி
பட்டாசு குடோனில் வெடி விபத்து சிவகாசி முதியவர் உடல் கருகி பலி
பட்டாசு குடோனில் வெடி விபத்து சிவகாசி முதியவர் உடல் கருகி பலி
ADDED : செப் 05, 2024 03:04 AM
காரிப்பட்டி: பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த முதியவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே பருத்திக்காட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார், 52. அருகே உள்ள வெள்ளியம்பட்டி காட்டுவளவில் பட்டாசு குடோன் நடத்துகிறார். அங்கு நேற்று காலை, 9:30 மணிக்கு தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. அதில் பணியில் இருந்த, சிவகாசியை சேர்ந்த ஜெயராமன், 55, சம்பவ இடத்தில் கருகி உயிரிழந்தார். தவிர சிவகாசியை சேர்ந்த முத்துராஜா, 48, பருத்திக்காட்டை சேர்ந்த கார்த்தி, 28, ஆகியோர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை அறிந்து அரை மணி நேரத்தில் சேலம் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். தொடர்ந்து வாழப்பாடி தீயணைப்பு துறையினரும் வந்தனர். அவர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். வீராணம், காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காரிப்பட்டி போலீசார்
வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஜெயக்குமார் அனுமதி பெற்று, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தகர சீட்டில் வீடு போன்று அமைத்து குடோன் நடத்தினார். அங்கு சிவகாசியில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசு தயாரிக்கும் மருந்து வந்தது. அந்த மூட்டைகளை பணியாளர்கள் இறக்கியபோது மருந்து சிந்தி வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த தகர சீட் கட்டட பகுதி முற்றிலும் சரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
இதையடுத்து எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பின்றி வைத்தல், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குடோன் உரிமையாளர் ஜெயக்குமார், 52, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.