/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில நல்லாசிரியர் விருது: மாவட்டத்தில் 12 பேர் தேர்வு
/
மாநில நல்லாசிரியர் விருது: மாவட்டத்தில் 12 பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது: மாவட்டத்தில் 12 பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது: மாவட்டத்தில் 12 பேர் தேர்வு
ADDED : செப் 05, 2024 02:56 AM
சேலம்: மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து, 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தொடக்க கல்வி, பள்ளி கல்வி, தனியார் பள்ளிகள் என, 3 பிரிவுகளாக தேர்வு செய்யப்படும் பட்டியலில் சேலம் மாவட்டத்தில் இருந்து, 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கொங்கணாபுரம் ஒன்றியம் மடத்துார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள், சமுத்திரம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அனிதா, வாழப்பாடி ஒன்றியம் அரசன்குட்டை துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜசேகரன், வீரபாண்டி ஒன்றியம் தும்பாதுளிப்பட்டி துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சுடலைக்கண், சங்ககிரி ஒன்றியம் தாசநாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை பாக்கியலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாதநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை அன்பரசி, சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆதித்தன், கொட்டவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மீனா, அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் செந்தில்குமார், தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புவனேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு இன்று சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் அளித்த பேட்டி:
கொங்கணாபுரம் ஒன்றியம் மடத்துார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மா.கோவிந்தம்மாள், 54: இங்கு, 8 ஆண்டாக, ஹெச்.எம்., ஆக பணிபுரிகிறேன். 20 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறேன். கணினி, 'டேப்', 'ஸ்மார்ட் டிவி', யு - டியூப் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. 'ஸ்போக்கன் இங்லீஷ்' கற்றுத்தரப்படுகிறது. அதேபோல் பள்ளி வளர்ச்சிக்கு ஏராளமான நிதி பெற்றுக்கொடுத்துள்ளேன்.
கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சு.அனிதா, 50: கடந்த, 5 ஆண்டுகளில், இப்பள்ளி மாணவர் எண்ணிக்கையை, 3 மடங்கு உயர்த்தியுள்ளேன். 9 ஆண்டுகளில் ஒருமுறை கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் வீடுதோறும் சென்று உணவுப்பொருட்கள் வழங்கியதோடு, 'வாட்ஸாப்' மூலம் பாடம் நடத்தியுள்ளேன். ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் மாணவர்களை பங்கேற்க செய்துள்ளேன். சிறந்த கற்றல், கற்பித்தலுக்கு விருது பெற்றுள்ளேன்.
வாழப்பாடி ஒன்றியம் அரசன்குட்டை துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.ராஜசேகரன், 39: வகுப்பறையில் பல்வேறு படங்கள் வரைந்து குழந்தைகளுக்கு புரியும்படி கற்பித்து வருகிறேன். மொபைல் போன் மூலம் வீடியோ, படங்களை வைத்தும் கற்பிக்கிறேன். 'துளி' அறக்கட்டளை மூலம் பெற்றோர் அற்ற குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தாடை, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறேன். தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இலவச சிலம்பு பயிற்சி, அரசு வேலைக்கு இலவச பயிற்சி என, மாணவர்கள் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறேன்.
வீரபாண்டி ஒன்றியம் தும்பாதுளிப்பட்டி துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் க.சுடலைக்கண், 41: இரண்டரை ஆண்டுகளாக சொந்த செலவில் சுற்றுவட்டார மாணவர்களை, வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளேன். இப்பள்ளி மட்டுமன்றி அருகே உள்ள லகுவம்பட்டி, முருங்கப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசான் அமர்த்தி இலவச சிலம்ப பயிற்சி அளித்து வருகிறேன். தை முதல் நாளில் சுற்றுவட்டார பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், ஏழ்மை, பெற்றோர் அற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறேன்.
சங்ககிரி ஒன்றியம் தாசநாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை க.பாக்கியலட்சுமி, 44: கடந்த, 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறேன். பள்ளி குழந்தைகளுக்கு கற்றல் குறித்து, 200க்கும் மேற்பட்ட, 'அனிமேஷன்' வீடியோக்களை தயாரித்து கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறேன். துணை கருவிகள் மூலம் எளிய முறை, வகுப்பறையில் செயல் வழி கற்றல், பாரம்பரிய விளையாட்டு முறை கல்வி, அபாகஸ் கணித பயிற்சி, பொம்மலாட்டம் மூலம் பாடம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி உள்ளேன்.
மேச்சேரி, மாதநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஏ.அன்பரசி, 39: தமிழில் தொன்மை எழுத்துகள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன். 9ம் வகுப்பு பாடத்தில் அகழாய்வு, 10ம் வகுப்பில் சிற்ப கலை உள்ளிட்ட இதுபோன்ற செய்திகளை மாணவர்களுக்கு ஒருசேர பாடம் எடுத்து வருகிறேன். பல்வேறு போட்டிகளுக்கும் மாணவர்களை தயார்படுத்துகிறேன். 47 ஆண்டுகளாக பஸ் வசதியின்றி, 4 கி.மீ., மாணவர்கள் நடந்து பள்ளிக்கு வந்தனர். தற்போது தலைமை ஆசிரியர் உதவியுடன் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தலைவாசல், சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.ஆதித்தன், 44: கிராமப்புற மாணவர்கள், ஆங்கிலம் கற்க எளிய முறையில் ஆங்கில இலக்கணம், எளிய சொற்களை கற்றுக்கொடுத்து வருகிறேன். ஆங்கிலம் கற்றால் எந்த போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளலாம். ஆங்கிலம் சரளமாக பேசுதல், இலக்கணத்துடன் கற்றுக்கொள்வதால் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். நாட்டு நலப்பணி திட்டத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். அதில் மாணவர்களுடன் பல சமூக சேவை பணியில் ஈடுபட்டு
வருகிறேன்.
பெத்தநாயக்கன்
பாளையம், கொட்டவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இரா.கலாவதி, 59: கடந்த கல்வியாண்டில் சேலம் கலெக்டரிடம், 100 சதவீத வருகை, 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு பரிசு பெற்றுள்ளேன். 2023 - -24 கல்வியாண்டில், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சிக்கு மாநில முதல்வரிடம் பரிசு பெற்றேன். மாணவர் நலனுக்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மைதானம் சமன்படுத்தப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
வாழப்பாடி, பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை க.மீனா, 53: வகுப்பறையை வண்ணம் பூசி சிறந்த கற்பித்தல் சூழல் ஏற்படுத்தி உள்ளேன். முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டு டெஸ்க், பெஞ்ச் பள்ளிக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். கொடி கம்பம், மேடை, மாணவர்கள் சாப்பிட உணவு கூடம் அமைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன். மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று கற்பித்து, 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளேன். பள்ளியில், 2வது நுழைவாயில் அமைக்க, 80,000 ரூபாய் செலவிட்டுள்ளேன்.
சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி
ஆசிரியர் பா.செந்தில்குமார், 43: ஆறு முதல், பிளஸ் 2 வரை படித்த, அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, 2017ல் மாறுதல் பெற்று வந்தேன். 22 ஆண்டு கற்பித்தல் பணியில், 18 ஆண்டுகள், 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளேன். இடைநிற்றலை தவிர்க்க பேரணி, பெண் கல்வி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு, உயர்கல்வி ஆலோசனை என தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுத்தி வருகிறேன். படித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதே மகிழ்ச்சி.
தலைவாசல், தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வி.புவனேஸ்வரன், 51: கடந்த, 29 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளேன். கணிதத்தால் சில மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அந்த மாணவர்களுக்கு எளிய முறையில் கணித சிறப்பு பயிற்சி கொடுக்கிறேன். ஒழுக்கத்துடன் படிக்கும் மாணவர்கள் முன்னேற்றத்துக்கு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களை, கணித பாடத்தில் சாதனையாளராக உருவாக்குவதே லட்சியம். போட்டித்தேர்வுகளுக்கு பள்ளி பருவத்தில் இருந்து, மாணவர்களை தயார்
படுத்தி வருகிறேன்.
சேலம், சின்னதிருப்பதி ஜெய்ராம் மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் கோ.வினோத், 37: எம்.எட்., எம்.பில்., முடித்து, 15 ஆண்டுகளாக, ஆசிரியராக உள்ளேன். 9 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறேன். தொண்டு நிறுவனம், தனியார் அமைப்புகளில் பல விருதுகள் வாங்கி இருந்தாலும் தற்போது முதல்முறை நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தேன். முதலிலேயே கிடைத்தது மகிழ்ச்சி. இன்னும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் அளவுக்கு கற்பித்தல், வழிகாட்டுதலில் சிறப்பாக செயலாற்ற, இது ஊக்கமாக அமையும்.