/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
/
தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
ADDED : பிப் 15, 2025 05:45 AM
சேலம்: தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்துக்கு, சேலம் அருகே உள்ள மேச்சேரி, சின்னதிருப்பதி, சாத்தப்பாடி, ஓமலூர், காருவள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்-பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தக்காளி விளைச்சலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால், தக்காளி விளைச்சல் அதிகரித்-துள்ளது. அதனால் விலையும் சரிந்து வருகிறது.
இதுகுறித்து வேளாண் விற்பனை அதிகாரிகள் கூறியதாவது:
தக்காளி விளைச்சலுக்கான பருவநிலை நன்றாக இருக்கிறது. காலையில் பனி, மதியம் நல்ல வெயில் அடிக்கிறது. பனியினால் ஈரப்பதம், வெயிலினால் பூக்களில் மகரந்த சேர்க்கை நன்றாக இருக்கும். பூக்கள் உதிர்வது இல்லை, நோய் தாக்கமும் பெரிதாக இல்லை. தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
தக்காளி சீசன் ஜன., மாத கடைசியில் துவங்கியது, மார்ச் மாதம் வரை இருக்கும். விளைச்சல் அதிகரிப்பால் தேவையை மீறி தக்காளி வரத்து, 30 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக உள்-ளது.
அதேபோல் ஈரோடு, ஓட்டன்சத்திரம், தாராபுரம் பகுதிகளிலும் தக்காளி அதிக அளவு விற்பனைக்கு வருவதால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இருந்து தக்-காளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இங்கேயே விவசாயிகள், வியாபாரிகள் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்-ளப்பட்டுள்ளதால், தக்காளி விலை குறைந்து வருகிறது.
இதனிடையே டிச., மாதத்தில் கிலோ தக்காளி, 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மாவட்டத்திற்கு தினசரி, 60 முதல் 70 டன் தக்காளி தேவை. கடந்த வாரம், 50 முதல் 60 டன் தக்காளி வரத்து இருந்து. நேற்று, 100 டன்னிற்கு மேல் வரத்து இருந்தது.
கடந்த வாரம் ஒரு கிரேடு (25 கிலோ) முதல் ரகம், 600 முதல் 700 ரூபாய், இரண்டாவது ரகம், 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முதல் ரகம், 400 ரூபாய், இரண்டாவது ரகம், 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி கடந்த, 7ல், உழவர் சந்தையில் முதல் ரகம் கிலோ, 30 ரூபாய், இரண்டாவது ரகம், 20 ரூபாய்க்கும் விற்பனையா-னது. நேற்று சந்தையில் தக்காளி விலை குறைந்து, முதல் ரகம், 18 ரூபாய், இரண்டாம் ரகம், 16 ரூபாய்க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களிலும் தக்காளி வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோட்டிலும் சரிவு
ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், தாளவாடி, தர்மபுரி, ஆந்திரா குப்பம், கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி வரத்தாகும். கடந்த சில வாரத்துக்கு முன் வரத்து குறைந்து ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கு விற்பனை-யானது. தினமும், 2,000 பெட்டி தக்காளி வரத்தான நிலை மாறி, 8,000 பெட்டியாக நேற்று அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை விற்பனையானது. வெளி கடைகளில் 12 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனையானது.