/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் கால்வாயில் பாசன நீர் திறக்கப்படுமா?: சேலம், நாமக்கல், ஈரோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
மேட்டூர் கால்வாயில் பாசன நீர் திறக்கப்படுமா?: சேலம், நாமக்கல், ஈரோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் கால்வாயில் பாசன நீர் திறக்கப்படுமா?: சேலம், நாமக்கல், ஈரோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் கால்வாயில் பாசன நீர் திறக்கப்படுமா?: சேலம், நாமக்கல், ஈரோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 10:03 AM
மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் நடப்பாண்டு பாசனத்துக்கு நீர் திறக்கப்படுமா என, 3 மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய், 1947ல் தொடங்கி, 1954 வரை கட்டப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து முதல்முறை, 1955ல் கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் அணையில் இருந்து கால்வாயில் ஆக., 1 முதல் டிச., 15 வரை, தினமும் அதிகபட்சம், 1,000 கனஅடி வீதம், 137 நாட்களில், 9.5 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்படும்.
இதன்மூலம் சேலத்தில், 16,433 ஏக்கர், நாமக்கல்லில், 11,337, ஈரோட்டில், 17,230 என, 3 மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கால்வாய், மேட்டூர் அடுத்த காவேரிகிராஸ் பகுதியில் கிழக்கு, மேற்கு என, 2 ஆக பிரிகிறது. இதில் கிழக்கு கால்வாயில் திறக்கும் நீர் மூலம், 27,000 ஏக்கர், மேற்கு கால்வாய் நீரில், 18,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஆண்டு அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால், 3 மாவட்டங்களில், 45,000 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. கடந்த மார்ச், 26 முதல் ஏப்., 10 வரை, கரையோர நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த, கால்வாயில் வினாடிக்கு, 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதுவரை ஆக., 1க்கு முன், 14 முறை, அதே ஆகஸ்டில், 35 முறை, தாமதமாக, 13 முறை என, பாசனத்துக்கு, 62 ஆண்டுகள் நீர்திறக்கப்பட்டுள்ளது. வறட்சியால், 6 ஆண்டுகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 83.98 அடி, நீர் இருப்பு, 46 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்மட்டம் கூடுதலாக உள்ளதால் நடப்பாண்டு ஆக., 1ல் நீர்திறக்கப்படுமா என, கால்வாய் பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து கொளத்துார் ஒன்றியம் நவப்பட்டி விவசாயி நாகராஜ், 59, கூறுகையில், ''கால்வாயில் நீர் திறப்பது குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் சாகுபடி பணி தொடங்க, பாசன விவசாயிகள் தயாராவர். விதை நெல் கொள்முதல், நாற்றுகளை நடவு செய்யும் பணிகளை தொடங்குவர். அதனால் நீர் திறப்பு குறித்து ஒரு வாரத்துக்கு முன் அரசு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.