/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்
/
வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்
வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்
வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்
ADDED : ஆக 06, 2024 02:14 AM
சேலம்,
தாரமங்கலம் அருகே, வெள்ளாளபுரம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட கையோடு, உருவாக்கப்பட்ட இந்த ஏரி தற்போது, 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தில் ஒன்றாக உள்ளது.
கடந்த, 31ல், மேட்டூர் உபரிநீர், திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து மின்மோட்டார் உதவியுடன், வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, எம்.காளிப்பட்டி ஏரி நிரம்பி, தற்போது மானத்தாள் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. மானத்தாள் ஏரி நிரம்பி வெளியேறும் நீர், அமரகோணி, பெரியகாடம்பட்டி, பவளத்தானுார், துட்டம்பட்டி ஏரியை தொடர்ந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளாளபுரம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும். ஆனால், உபரிநீர் வேகம் குறைவான அளவில் இருப்பதால், மானத்தாள் ஏரியை கடந்து அடுத்தடுத்துள்ள ஏரிக்கு வரும் தண்ணீர், வெள்ளாளபுரம் ஏரியை வந்தடையுமா என, விவசாயிகள் சந்தேகப்படுகின்றனர்.
இது தொடர்பாக, வெள்ளாளபுரம் நீர்பாசன விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது: திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலைத்தில், 940 குதிரை திறன் கொண்ட, 10 மின்மோட்டாரில், ஒரு மோட்டார் மட்டுமே இயக்குவதால், குறைந்த அளவிலான உபரிநீர் மட்டுமே, ஏரிகளுக்கு வருகின்றன. அதனால், ஏரிகள் அடுத்தடுத்து நிரம்புவது தாமதமாகிறது. எனவே, அனைத்து ஏரிகளும் வேகமாக நிரம்பிடும் வகையில், இயக்கப்படும் மின்மோட்டார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வெள்ளாளபுரம் ஏரி நிரம்புவது கேள்வி குறியாகி, 2,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவது பாதிக்கப்படும். அதை சார்ந்துள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல், இத்திட்டத்தின் நோக்கம் வீணாகிவிடும்.
இவ்வாறு கூறினர்.