/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் தொழிலாளி பலி: 4 பேர் படுகாயம்
/
விபத்தில் தொழிலாளி பலி: 4 பேர் படுகாயம்
ADDED : மார் 22, 2024 01:45 AM
காரிப்பட்டி;காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி, ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாணிக்கம், 47. இவரது உறவினர் சம்பத், 51. இவர்கள், 'ஜூபிடர்' மொபட்டில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாணிக்கம் ஓட்டினார். அவர் ஹெல்மட் அணியவில்லை. மதியம், 12:00 மணிக்கு மின்னாம்பள்ளி சந்தை அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி வேகமாக வந்த, மினி சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் மாணிக்கம், சம்பத் துாக்கி வீசப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கம் உயிரிழந்தார். சம்பத் கவலைக்கிடமான நிலையில், மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மினி சரக்கு வேனில் வந்த டிரைவர் ரவி, அவருடன் வந்த இருவரும் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் பின்னால் இருந்த, 3 மாடுகள் காயத்துடன் உயிர்தப்பின. சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மொபட் மோதியதில் லேசான காயம் அடைந்தனர். தலைகுப்புற கவிழ்ந்த வேன், மொபட் நொறுங்கியது. காரிப்பட்டி போலீசார், சேதம் அடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தி விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மற்றொரு விபத்து
தாரமங்கலம், கருக்கல்வாடி நரசுக்காட்டை சேர்ந்தவர் சந்திரன், 50. கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, அழகுசமுத்திரம் அம்மன் தியேட்டர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது சேலத்தில் இருந்து வந்த, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

