/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 ஏரி நிரப்பும் திட்டம் எப்போது நிறைவேறும் குறைதீர் திட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
/
100 ஏரி நிரப்பும் திட்டம் எப்போது நிறைவேறும் குறைதீர் திட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
100 ஏரி நிரப்பும் திட்டம் எப்போது நிறைவேறும் குறைதீர் திட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
100 ஏரி நிரப்பும் திட்டம் எப்போது நிறைவேறும் குறைதீர் திட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2024 01:19 AM
சேலம், செப். 28-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., மேனகா தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பேசிய விபரம்:
கணேசன்: தலைவாசல் அருகே, 167 ஏக்கர் பரப்புள்ள வெள்ளையூர் பெரிய ஏரியில், 40 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 2001ல், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏரி ஆக்கிரமிப்பு அகற்றிய நிலையில் மீண்டும், ஏரிக்கரையை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் செய்தும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
பெரியண்ணன்: தலைவாசல் அருகே ஊனத்துாரில், 1986ல், பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட தடுப்பணை, இன்னமும் நீர்நிலை வகைப்பாடுகளில் சேர்க்கப்படவில்லை. அதனால், தடுப்பணை பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற, 2023ல், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.
நல்லதம்பி: சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை உழவர்சந்தைகளில் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழப்பாடி உழவர்சந்தையை மேம்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம்: சேலத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி உழவர்சந்தைகளில் 50 சதவீதம் வியாபாரிகள் புகுந்து விட்டதால், உண்மையான விவசாயிகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
சுரேஷ்: மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு, 100 ஏரி நிரப்பும் திட்டத்தில் முதல்கட்டமாக, 56 ஏரி நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 36 ஏரி மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. நீரேற்று நிலையங்களில், 50 சதவீத மின்மோட்டார் மட்டுமே இயக்கப்பட்டதால், திட்டமிட்டப்படி, 56 ஏரியில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இதற்கு, அதிகாரிகள் அலட்சியம் தான் காரணம். மேலும் வைரன் ஏரி, வாத்தியப்பட்டி, குட்டப்பட்டி, இருப்பாளி, செலவடை, இளவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கவே இல்லை. அதனால் 100 ஏரி நிரப்பும் திட்டம் கேள்விகுறியாகிவிட்டது.
காசிலிங்கம்: தலைவாசல் அருகே, ஆரத்தி அக்ரஹாரத்தில் என்னுடைய நிலத்தை அளவீடு செய்ய விடாமல் பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள் தடுக்கின்றனர். சர்வேயரும் சரிவர நிலத்தை அளவீடு செய்யாமல் போக்குகாட்டுகிறார். இதுபற்றி முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி, விசாரணை நடந்தும், நடவடிக்கை இல்லை. என்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர் என்றவர், திடீரென, டி.ஆர்.ஓ., முன்பாக சென்று, மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். உடனடியாக அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை வெளியே அழைத்து சென்றதால், பரபரப்பு உண்டானது.