/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10ம் வகுப்பு விடைத்தாள் தைப்பு பணி; அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் புகார்
/
10ம் வகுப்பு விடைத்தாள் தைப்பு பணி; அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் புகார்
10ம் வகுப்பு விடைத்தாள் தைப்பு பணி; அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் புகார்
10ம் வகுப்பு விடைத்தாள் தைப்பு பணி; அலைக்கழிப்பதாக ஆசிரியர்கள் புகார்
ADDED : பிப் 14, 2025 07:25 AM
சேலம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் தைப்பு பணிக்கு ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல், ஏப்., 15 வரை நடக்க உள்ளது. இதற்குரிய விடைத்தாள்களில், 'க்யூ.ஆர்., கோடு' அமைக்கப்பட்ட முகப்பு தாள்கள் அச்சிடப்பட்டு, பாட வாரியாக தைத்து வழங்கப்படுகிறது. இப்பணி, கடந்த ஆண்டு வரை அந்தந்த தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்துக்கு ஒன்று அல்லது இரு மையங்களில் மட்டும் விடைத்தாள் தைக்கும் பணி நடக்கிறது.இதனால் ஒவ்வொரு மைய ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மையத்துக்கு சென்றதும், தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாட வாரியாக விடைத்தாள்களை தைக்க கொடுக்கப்படுகிறது. பின் அதை சரிபார்த்து, மையங்களுக்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள்களை தைக்க ஆசிரியர்கள் அதிகபட்சமாக, 50 கி.மீ., பயணித்து, நாள் முழுதும் காத்திருந்து எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருந்தால், பல நாட்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:சமூக அறிவியலில் மேப், கணிதத்தில் கிராப் வரைபடம் மட்டும் இணைக்க வேண்டியிருக்கும். மற்றபடி, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களில் மாற்றம் இருக்காது. இதை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகமே தைத்து, தேர்வு மையங்களுக்கு வழங்கி, சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தினால் போதும். இல்லை எனில் விடைத்தாள் தைப்பதற்கான மதிப்பூதியத்தை அந்தந்த தேர்வு மையத்துக்கு வழங்கி, தைக்க நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து, தேர்வு நேரத்தில் ஆசிரியர்களை அலைக்கழிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

