ADDED : செப் 29, 2024 01:04 AM
'15,000 நாய்களுக்கு கருத்தடை'
சேலம், செப். 29-
ரேபிஸ் தினத்தை முன்னிட்டு சேலம், வாய்க்கால்பட்டறையில் உள்ள பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில், நாய்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதை தொடங்கி வைத்து மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:
மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம், வாய்க்கால்பட்டறை, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இரு இடங்களில் செயல்படுகிறது. அதன்மூலம் இதுவரை, 15,117 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
ஓராண்டு இடைவெளியில் தடுப்பூசி செலுத்தினால் ரேபீஸ் நோயிலிருந்து பாதுகாக்கலாம். அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த, புதன்தோறும் முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை, 13 முகாம்கள் மூலம், 1,503 தெருநாய்கள், 758 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கமிஷனர் ரஞ்ஜீத்சிங், துணை மேயர் சாரதாதேவி, மாநகர நல அலுவலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2,100 செல்லப்பிராணிக்கு தடுப்பூசி
உலக வெறிநோய் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 149 கால்நடை மருந்தகம்; 7 கால்நடை மருத்துவமனை, நடமாடும் கால்நடை மருந்தகம் என, 157 மையங்களில் நடந்த முகாமில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அழைத்து வந்து, இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில், 2,100 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் முகாம் நடத்தப்பட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்நோய் அதிகளவில் ஏற்படாமல் இருக்க முறையான தடுப்பூசி முறை பின்பற்றுவதே ஒரேவழி என, முகாமில் அறிவுறுத்தப்பட்டது.