/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
344 அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர் அசத்தல்
/
344 அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர் அசத்தல்
ADDED : பிப் 06, 2025 01:31 AM

இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு, தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அங்குள்ள எலும்பு அறுவை சிகிச்சை பிரிவில், தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம், பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 400க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்பட, 1,200க்கும் மேற்பட்ட எலும்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஆர்த்தோ மருத்துவர் பாலாஜி, கடந்த ஆண்டில் மட்டும், இடுப்பு மூட்டு மாற்று, முழங்கால் மூட்டு மாற்று, கை, கால் எலும்பு முறிவு உள்பட, 344 எலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவராக, பாலாஜிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னையில் சமீபத்தில் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அதே போல, கடந்த ஆண்டு ஜூலை, 1ல் மருத்துவர் தினத்தன்று, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவர் பாலாஜிக்கு விருது வழங்கி இருந்தார்.
இதுகுறித்து பாலாஜி கூறுகையில், ''கடந்த ஆண்டில் அதிகளவு அறுவை சிகிச்சை செய்துள்ளேன். தினமும், 2 அல்லது 3 அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன், செவிலியர்கள், அறுவை சிகிச்சை அரங்க பணியாளர்கள் தான் காரணம்,'' என்றார்.
கோகுலகிருஷ்ணன் கூறுகையில், ''இங்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.