/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
40வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு
/
40வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு
ADDED : செப் 09, 2025 01:42 AM
சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், 40வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் நடந்தது.சேலம், செவ்வாய்பேட்டை அரசு பார்வையிழந்தோர் பள்ளி மாணவர்கள் கண்தான விழிப்புணர்வு பாடல்களை பாடினர். மருத்துவமனை டீன் தேவி மீனாள் கூறுகையில், ''இந்த மருத்துவமனையில், 2005 முதல் கண் வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 158 பேருக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும், 34 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்து விட்டால், அவரது கண்களை தானமாக வழங்க அந்த குடும்பத்தினர் முன்வர வேண்டும்.
ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்படும் கருவிழிகளை கொண்டு, இருவருக்கு கண் பார்வை கிடைக்கும். பிறந்த குழந்தை முதல், 95 வயது முதியவர் வரை கண்தானம் செய்யலாம். இறந்து, 6 மணி நேரத்துக்குள் கருவிழியை எடுத்து விட வேண்டும். அதுவரை கண்ணில் ஈரத்துணியால் மூடி வைத்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அல்லது கண் வங்கிகளுக்கு தகவல் கொடுத்தால், வீட்டுக்கே வந்து கண்களை பெற்று செல்வர்,''
என்றார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், கண் சிகிச்சை பிரிவு தலைவர் தேன்மொழி உள்ளிட்ட கண் மருத்துவத்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.