ADDED : அக் 01, 2025 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்; சேலம் மாவட்டம், அனுப்பூரை சேர்ந்தவர் உண்ணாமலை, 75. இவரது கணவர், இரு மகன்கள் இறந்துவிட்டனர். மகள் ராஜாமணி, 60, அதே பகுதியில் கணவருடன் வசிக்கிறார். விவசாயம் செய்து வந்த உண்ணாமலை, அம்மாபேட்டை உழவர் சந்தையில் காய்கறி விற்றுவந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, உண்ணாமலைக்கு சாப்பாடு கொடுக்க, ராஜாமணி சென்றபோது, வீட்டில் காயத்துடன் உண்ணாமலை இறந்து கிடந்தார்.
அவர் அணிந்திருந்த, சங்கிலி, மூக்குத்தி, தோடு என, 4.4 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. ராஜாமணி புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'மூதாட்டியின் தலை, கையில் காயங்கள் உள்ளன. நகைக்காக, மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பிரேத பரிசோதனைக்கு பின் உண்மை தெரிய வரும்' என்றனர்.