/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரும்பு ராடால் வாலிபரை தாக்கிய 6 பேர் கைது
/
இரும்பு ராடால் வாலிபரை தாக்கிய 6 பேர் கைது
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
சேலம்: சேலம், சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் கோகுல்நாத், 25. அதே பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிகிறார். இவர், கடந்த, 20ல், உறவினர் ஆனந்துடன், 3 ரோடு பகுதியில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது வந்த, பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார், இரு சக்கர வாகனத்துக்கு, கடன் தவணை தொகையை, ஆனந்திடம் கேட்டார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோகுல்நாத் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பினார். இதனால், 26 இரவு, கோகுல்நாத் வீட்டுக்கு சென்ற சிவக்குமார் உள்ளிட்ட சிலர், தகராறு குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இரும்பு ராடால் கோகுல்நாத்தை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, பள்ளப்பட்டி சிவக்குமார், வினோத், 36, கவுதம், 18, சந்துரு, 25, திருவாக்கவுண்டனுார் கனகராஜ், 30, மனோபாரதி, 31, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
சேலம், சூரமங்கலம் அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அஜீத், 28. நடன கலைஞர். இவரது வீடு அருகே அருள்தாஸ் என்ற அருள்குமார், 46, வசிக்கிறார். ரவுடியான இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுகிறார். அங்கு அஜித், நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்துச்சென்றதாக கூறி, அருள்தாஸ் கேட்டார். அதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 26 இரவு, தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்த அஜித்தை, அருள்தாஸ் தாக்கியுள்ளார். காயம் அடைந்த அஜித், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் அருள்தாைஸ கைது செய்தனர். அதேபோல் அருள்தாஸ் புகாரில் அஜித் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.