/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு எழுத்தர் பணிக்கு 662 பேர் 'மல்லுக்கட்டு'
/
ஒரு எழுத்தர் பணிக்கு 662 பேர் 'மல்லுக்கட்டு'
ADDED : அக் 17, 2025 07:50 PM
பனமரத்துப்பட்டி: ஒரே ஒரு பதிவறை எழுத்தர் பணிக்கு, 662 பேர் விண்ணப்பித்த நிலையில், சிபாரிசு கேட்டு வருபவர்களால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் திணறி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், ஒரு பதிவறை எழுத்தர் பணியிடம் காலியாக உள்ளது. அப்பணியிடத்தை நிரப்ப, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 662 பேர் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். அதில், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர், 70 சதவீதம் பேர் அடங்குவர்.
ஒன்றிய அலுவலகத்தில் அக்., 22, 23, 24ல் நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது. தினமும், 200 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விண்ணப்பதாரர், தமிழில் வாசித்தல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றின் திறமைகளை வெளிப்படுத்த, தமிழ் திறன் தேர்வு நடக்க உள்ளது.
ஆனால், அப்பணியிடத்தை கைப்பற்ற ஆளுங்கட்சி பிரமுகர்களை, விண்ணப்பதாரர்கள் சுற்றி, சுற்றி வருகின்றனர். பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான்.
ஒரு வேலைக்கு யாரை பரிந்துரைப்பது என, ஆளுங்கட்சி பிரமுகர்களே திணறி வருகின்றனர். இதனால் சிபாரிசு கேட்டு வருபவர்களை பார்த்து, ஆளுங்கட்சியினர் ஓட்டம் பிடிக்கும் நிலை உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனாவில் பணிபுரிந்து உயிரிழந்த குடும்பம் உள்ளிட்ட முன்னுரிமை, தகுந்த தகுதி அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படும்' என்றனர்.