ADDED : அக் 17, 2025 02:19 AM
ஏற்காடு, :ஏற்காட்டில் நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம், 1:15 முதல், 2:20 மணி வரை கனமழை பெய்தது. பின் மழை குறைந்து ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால், 10 அடி துாரத்தில் இருப்பது கூட தெரியாத சூழல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், மெதுவாக ஓட்டிச்சென்றனர். தொடர்ந்து மாலை, ஏற்காடு முழுதும் பனிமுட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. மின்தடை
அதேபோல் வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், ஏத்தாப்பூர், சிங்கிபுரம், முத்தம்பட்டி, துக்கியாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால், அரை மணி நேரத்துக்கு மேல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.
கழிவுநீருடன் தேங்கியது
தாரமங்கலத்தில் நேற்று மதியம், 30 நிமிடம் கனமழை பெய்தது. இதனால் பஸ் ஸ்டாண்ட் அருகே, நங்கவள்ளி சாலையில், மழைநீர், சாக்கடையில் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. அந்த வழியே செல்லவே, பெண்கள், முதியோர் சிரமத்துக்கு ஆளாகினர். வியாபாரிகளும், கழிவுநீர் நாற்றத்தால் சிரமப்பட்டனர். இதற்கு அதிகாரிகள் தீர்வு காண, மக்கள் வலியுறுத்தினர்.
ஏரி நிரம்பியதால் குளிக்க தடை
காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை உள்கோம்பை மலை அடிவாரப்பகுதி மற்றும் ஏற்காட்டில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் டேனிஷ்பேட்டை, கோட்டைகுள்ளமுடையான் ஏரிகள் நிரம்பின. அதிலிருந்த வெளியேறிய உபரிநீர், பண்ணப்பட்டி ஏரிக்கு சென்றது. நேற்று முன்தினம் மாலை, அந்த ஏரியும் நிரம்பி கோடி விழுந்து, பண்ணப்பட்டி குட்டைக்கு சென்று, அதில் கோடி விழுந்து தண்ணீர் செல்கிறது. பண்ணப்பட்டி ஏரியில் மக்கள் குளிக்கக்கூடாது என ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.----------------------------