/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
900 ஆண்டு பழமையான முருகன் கற்சிலை சூளகிரி துரை ஏரி அருகே கண்டுபிடிப்பு
/
900 ஆண்டு பழமையான முருகன் கற்சிலை சூளகிரி துரை ஏரி அருகே கண்டுபிடிப்பு
900 ஆண்டு பழமையான முருகன் கற்சிலை சூளகிரி துரை ஏரி அருகே கண்டுபிடிப்பு
900 ஆண்டு பழமையான முருகன் கற்சிலை சூளகிரி துரை ஏரி அருகே கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 13, 2025 01:22 AM
சூளகிரி, சூளகிரி துரை ஏரி அருகே விவசாய நிலத்தில், 900 ஆண்டு பழமையான முருகன் கற்சிலையை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் துரை ஏரி உள்ளது. இதன் அருகே, ஒட்டர்பாளையம் செல்லும் வழியில், காய்ந்த மரம் ஒன்றில், முருகன் கற்சிலை இருப்பதாக சூளகிரியில் மளிகைக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவர், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் தலைவர் அறம்கிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் பார்வையிட்டு, காய்ந்து போன மரத்தின் வேர்களில், முருகன் சிலை இருப்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
துரை ஏரியின் மறுகரையில், விவசாய நிலத்தில் முருகன் கற்சிலையை கண்டுபிடித்துள்ளோம். இந்த இடத்தில், 50 ஆண்டுக்கு முன்பு வரை சிறிய கல்மண்டபம் இருந்த அடையாளங்கள் உள்ளன. அருகே ஒரு குளம் உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, இவ்விடத்தில் பழங்காலத்தில் முருகன் அல்லது சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இச்சிலையின் கை, கால்கள் சேதமடைந்துள்ளன. மயிலின் முகம் மட்டும், மரத்தின் உட்பகுதியில் சிக்கியுள்ளது. 2,000 ஆண்டுக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்துள்ளது.பேரிகை அருகே, அத்திமுகம் ஐராவதீஸ்வரர் கோவிலில், இதேபோன்று ஒரு முருகன் சிலை உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது, இந்த கற்சிலை, 11 அல்லது 12ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும். இந்த சிலையின் புகைப்படத்தை, ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் காண்பித்தபோது, அவரும் அதை உறுதி செய்தார். ஏனெனில், 13ம் நுாற்றாண்டுக்கு முன் செய்யப்படும் முருகன் கற்சிலைகளில், மயிலின் முகம், இடது பக்கம் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு பின் உருவாக்கிய முருகன் சிலைகளில், மயிலின் முகம் வலது பக்கம் பார்க்கும்படி இருப்பதை பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.