/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வராத கணவர்
/
திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வராத கணவர்
ADDED : பிப் 01, 2024 10:25 AM
ஆத்துார்: ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி, உடையார்பாளையத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் பேரூர் செயலர் ராஜா, 54. இவர், 4வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி கவிதா, 40, இரண்டாவது வார்டு கவுன்சிலராகி, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். செந்தாரப்பட்டியை சேர்ந்த மேத்தா, 42, என்ற பெண், நேற்று, தம்மம்பட்டியில் உள்ள ராஜா வீட்டுக்கு சென்றார்.
அப்போது, 'என் கணவர் ராஜா சில மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. குடும்ப செலவுக்கு வழியின்றி, 10 வயது மகளுடன் தவிக்கிறேன்' என, கவிதாவிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேத்தா, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து மேத்தா கூறியதாவது:
தம்மம்பட்டியை சேர்ந்த சர்புதீனை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடால், 2005ல் விவகாரத்து பெற்றேன். அதே ஆண்டில் தி.மு.க., நிர்வாகி ராஜா என்னை திருமணம் செய்து கொண்டதில், 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. எனது இடம், நகையை ராஜாவிடம் கொடுத்தேன். 3 ஆண்டுக்கு பின், கவிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாக வீட்டுக்கு வராததால் கணவரின் வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்த கவிதா, என்னை உருட்டு கட்டையால் தாக்கினார். அவருடன் இருந்த பெண்களும் தாக்கினர். கணவரின் துாண்டுதலில் அவரது இரண்டாவது மனைவி உள்ளிட்டோர் தாக்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜா கூறுகையில், 'கவிதா என்ற ஒரு மனைவி தான் உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது பொய் தகவல் கூறி வருகின்றனர். ஏற்கனவே, தி.மு.க., பேரூர் செயலர் பதவியை பறித்தனர். தற்போது மனைவியிடம் உள்ள தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவி பதவியை பறிக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், மேத்தாவை துாண்டிவிட்டு என் மீது பொய் புகார் கூறுகின்றனர். நான் மேத்தாவை திருமணம் செய்யவில்லை; குழந்தையும் பிறக்கவில்லை. டி.என்.ஏ., பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.