/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
/
பஸ் வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
பஸ் வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
பஸ் வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
ADDED : மார் 04, 2024 11:07 AM
ஆத்துார்: பஸ் வசதி இல்லாததால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என, பேனர் வைத்து, மலைக்கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சியில் பூமரத்துப்பட்டி, முட்டல் ஆகிய மலைக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் பூமரத்துப்பட்டி, முட்டல் கிராம மக்கள், 2022ல் நடந்த சிறப்பு மனு நீதி முகாமில், அப்போதைய சேலம் கலெக்டர் கார்மேகத்திடம், சாலை, பஸ் வசதி கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று, 'பஸ் வசதி இல்லாததை கண்டித்து வர உள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்கிறோம்' என, பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமங்களின் ஊரின் நுழைவு மற்றும் மையப்பகுதிகளில், மக்கள், 'பேனர்' வைத்துள்ளனர்.
இதையறிந்து தலைவாசல் தாசில்தார் அன்புசெழியன், பேச்சு நடத்தினார். அப்போது மக்கள், 'சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுக்கு மேலாகியும், காட்டுக்கோட்டை - மணிவிழுந்தான், ராமானுஜபுரம் வழியே முட்டல், பூமரத்துப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. இதனால், 8ம் வகுப்புக்கு மேல் மாணவ, மாணவியர், வெளியூர் சென்று படிக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம். இதுகுறித்து தற்போதைய கலெக்டர் பிருந்தாதேவியிடமும் மனு அளித்துள்ளோம்' என்றனர்.
தாசில்தார், 'பஸ் விடுவதற்கு சேலம் கோட்ட மேலாண் இயக்குனரிடம் தெரிவித்துள்ளோம். சாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். அதற்கு, 'பஸ் இயக்கிய பின், பேனர் அகற்றிக்கொள்ளப்படும்' என மக்கள் கூறினார். இதனால் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் திரும்பினர்.

