/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வரிடம் மனு அளித்த 30 நிமிடங்களில் 'ஆக் ஷன்'
/
முதல்வரிடம் மனு அளித்த 30 நிமிடங்களில் 'ஆக் ஷன்'
ADDED : ஜூன் 13, 2025 02:17 AM
சேலம்,:அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்த சிறிது நேரத்தில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அங்கு சுற்றுச்சுவர் இல்லாததோடு, கழிப்பறை பற்றாக்குறையால், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர்.
பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி யாழ்மொழி, 6ம் வகுப்பு மாணவர் அநிருத்தன் சங்கர், பள்ளி சீருடையில் நேற்று முன்தினம் இரவு மேட்டூரில் நடந்த முதல்வரின், 'ரோடு ஷோ'வில் பங்கேற்றனர்.
இரவு, 8:00 மணிக்கு அவர்களை பார்த்ததும், வாகனத்தை நிறுத்திய முதல்வர், அவர்களிடம் இருந்த மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்து சென்றார்.
இரவு, 8:30 மணி முதல் 11:30 மணிவரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சேலம் பொதுப்பணித்துறை, பி.டி.ஓ., அலுவலகம் ஆகியவற்றில் இருந்து, தலைமை ஆசிரியரிடம் பல்வேறு விபரங்கள், ஆவணங்களை பெற்றனர்.
நேற்று காலை, 7:00 மணிக்கு, நங்கவள்ளி ஒன்றிய பொறியாளர் வள்ளி தலைமையிலான குழுவினர், பள்ளியில் ஆய்வு செய்து, சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுவதற்கான மதிப்பீடு தயாரித்தனர்.
ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், முதல்வரிடம் மனு கொடுத்த மாணவ - மாணவியரை, ஆசிரியர்கள் பாராட்டினர்.