/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் 'அரசியல்' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
/
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் 'அரசியல்' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் 'அரசியல்' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் 'அரசியல்' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 12, 2024 06:42 AM
சேலம் : ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில், 'அரசியல்' செய்யப்படுவதாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஓமலுார் மணி, வீரபாண்டி ராஜமுத்து, ஏற்காடு சித்ரா ஆகியோர் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்தனர். அப்போது, அவரவர் தொகுதியில் நிலவும் பிரச்னைகளை, தனித்தனியே முறையிட்டு மனு அளித்தனர்.
இதுகுறித்து மணி கூறியதாவது:
ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில், 10 - 20 ஆண்டாக போடாத, 12 சாலைகளை போட்டு தர வலியுறுத்தி உள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியில் வளர்ச்சிப்பணிகள் முடிந்து, 6 மாதங்கள் ஆகியும் அதற்கான, 'பில்' இதுவரை, 'பாஸ்' ஆகவில்லை. அதனால் ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காடையாம்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர், சரிவர பணிக்கு வராததால், பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாடு நிதியில், 2023 - 24ல் வர வேண்டிய நிலுவைத்தொகை, 50 லட்சம் ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட குறைகளை களைய வலியுறுத்தி மனு அளித்தேன்.
அதேபோல் மற்ற தொகுதிகளில் சாலை, ரேஷன் கடை, அம்மா மண்டப கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தனித்தனியே அதன் எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர்.
என் தொகுதியில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு மட்டும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், 3 கோடி ரூபாய் ஒதுக்கி பணி நடக்கிறது. அதன் தலைவர் ராஜேந்திரன், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால், அவரது ஊராட்சிக்கு தாராள நிதி ஒதுக்கிவிட்டு, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காமல் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவது குறித்து வாய்மொழியாக புகார் தெரிவித்தோம். மேலும் அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதியை சமமாக பகிர்ந்தளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முறையிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.