/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அ.தி.மு.க., வெளியிடுவது எம்.ஜி.ஆர்., அறிக்கை'
/
'அ.தி.மு.க., வெளியிடுவது எம்.ஜி.ஆர்., அறிக்கை'
ADDED : பிப் 07, 2024 10:31 AM
சேலம்: ''தி.மு.க., வெளியிடுவது நம்பியார் அறிக்கை; அ.தி.மு.க., வெளியிடுவது எம்.ஜி.ஆர்., அறிக்கை,'' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், சேலம், திருவாக்கவுண்டனுாரில் நேற்று, மக்கள், வர்த்தக சங்கங்கள், தொழில் அமைப்பினர், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட, 50க்கும் மேற்பட்ட சங்கத்தினரிடம், கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின் அக்குழு தலைவர் நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, இதுவரை இல்லாதபடி அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும், தொழிலாளர், தொழில் நிறுவன உரிமையாளர்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும்படி அமையும். மக்களின் கோரிக்கைகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் இடம்பெறும். தமிழகத்தின், 9 மண்டலங்களில் மக்கள், சங்கங்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.
தி.மு.க., முன்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களின் கோரிக்கைகளை அவர்களே குப்பை தொட்டியில் வீசிவிட்டனர். அக்கட்சி தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை. மக்கள், அ.தி.மு.க.,வையும், பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சையும் நம்புகின்றனர். அதனால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து பொது நல சங்கங்களும் நம்பிக்கையுடன் இங்கு பங்கேற்றன. அவர்களின் கோரிக்கைகளை, தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். அதற்கான நடவடிக்கைகளை, இ.பி.எஸ்., மேற்கொள்வார். தி.மு.க., வெளியிடுவது நம்பியார் அறிக்கை; அ.தி.மு.க., வெளியிடுவது எம்.ஜி.ஆர்., அறிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, பொன்னையன், ஜெயக்குமார், மணியன், தங்கமணி, விஸ்வநாதன், அன்பழகன், ஜெயராமன், வளர்மதி, உதயகுமார், வைகைச்செல்வன், பாலகிருஷ்ணரெட்டி, சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

