ADDED : மே 24, 2024 07:09 AM
சேலம் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரம், 5 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது. அடுத்த மாதம், 4ல் ஓட்டு எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள், போலீசார், அரசு பணியாளர் என, 1,500க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
அப்பணியில் ஈடுபட உள்ள தேர்தல் நுண் பார்வையாளர், பணியாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உரிய நேரத்தில் ஓட்டு எண்ணிக்கையை தொடங்குவது, தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து எடுத்து கூறப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை அன்று அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சிவசுப்ரமணியன், ஜெகனாதன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.