/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு தி.மு.க.,வினர் எதிர்ப்பால் வாக்குவாதம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு தி.மு.க.,வினர் எதிர்ப்பால் வாக்குவாதம்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு தி.மு.க.,வினர் எதிர்ப்பால் வாக்குவாதம்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு தி.மு.க.,வினர் எதிர்ப்பால் வாக்குவாதம்
ADDED : மே 03, 2025 01:47 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். 18 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விவாதம்:
தி.மு.க., கவுன்சிலர் மீனாட்சி: இரு ஆண்டுக்கு முன் போடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறு பயன்பாட்டுக்கு வரவில்லை. குடிநீர் குழாய் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.
கமிஷனர் சையது முஸ்தபா கமால்: நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்., கவுன்சிலர் தேவேந்திரன்: ஆத்துார் - பைத்துார் சாலை, 2.50 கோடி ரூபாயில் புதிதாக விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணியின்போது சாலையோர மக்கள் பாதிக்கப்படாதபடி அமைக்க, மின்வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட அலுவலர்களுடன் குழு அமைத்து தீர்வு காண வேண்டும். நகராட்சிக்கு வரும் காவிரி குடிநீரை, வழிப்பாதையில் திருடுகின்றனர். இதனால் ஆத்துாருக்கு குறைந்த அளவிலேயே குடிநீர் வருகிறது.
கமிஷனர்: குழு அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். குடிநீர் குறைந்து வருவதாக எழுந்த புகாரால், மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது.
தி.மு.க., கவுன்சிலர் ஜீவா: ஆத்துார் நகரில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
கமிஷனர்: நாய்கள் பிடிக்கும் வாகனம், மாநகராட்சியில் இருந்து வரவழைத்து பணி மேற்கொள்ளப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் பிரபு: 27வது வார்டில் இரு தெருக்களில், 'கல்வெர்ட்' பாலத்தின் மேற்புற கான்கிரீட் பெயர்ந்து பள்ளமாக உள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார், ''நகராட்சி கூட்டத்திலும், அதிகாரிகளிடமும் எந்த புகார் கூறினாலும் கண்டுகொள்வதில்லை. திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடப்பதால் குடிநீர் தாமதமின்றி கொடுக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 4 பேர், வெளிநடப்பு செய்வதாக கூறி எழுந்து சென்றனர்.
அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள் பிரவீணா, தங்கவேல், 'கூட்டம் நடக்கும்போது அவமதிக்கும்படி எழுந்து செல்வது நியாயமில்லை' என்றனர்.
அ.தி.மு.க.,வினர், 'எங்கள் விருப்பம். நீங்கள் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்' என்றனர். இதில், அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், அ.தி.மு.க.,வினர், 'உங்களிடம் பேசி எந்த பலனும் இல்லை. வெளிநடப்பு செய்கிறோம்' என வெளியேறினர். தொடர்ந்து, தி.மு.க., கவுன்சிலர் ஜீவாவும் சென்றார். தி.மு.க.,வினர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மற்ற கவுன்சிலர்கள், வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.