/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்மன் கோவில்களில் அலங்காரம் ஆடி 4வது வெள்ளி கோலாகலம்
/
அம்மன் கோவில்களில் அலங்காரம் ஆடி 4வது வெள்ளி கோலாகலம்
அம்மன் கோவில்களில் அலங்காரம் ஆடி 4வது வெள்ளி கோலாகலம்
அம்மன் கோவில்களில் அலங்காரம் ஆடி 4வது வெள்ளி கோலாகலம்
ADDED : ஆக 09, 2025 01:17 AM
சேலம், ஆடி, 4வது வெள்ளியை ஒட்டி, சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. அய்யந்திரு
மாளிகை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் கயிறு அலங்காரம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் கனி அலங்காரம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் மஞ்சள் கயிறு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். அதேபோல் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பால்குட ஊர்வலம்
ஆத்துார் பெரியமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள், கைலாசநாதர் தெரு, நகராட்சி அலுவலகம் வழியே பம்பை, உடுக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பாலை, மூலவர் பெரியமாரியம்மன் சுவாமிக்கு ஊற்றி அபிேஷகம் செய்தனர். வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்பட ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர். ஆத்துார், கோட்டை ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில், பால் குடம், பூங்கரகம் எடுத்தும், அலகு குத்தி யும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். கோட்டை பகுதி முழுதும் ஊர்வலமாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர்.
ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், சுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஓமலுார் கடை வீதி பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருவிழா நிறைவு
தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த, 4ல் தொடங்கியது. ஆடி வெள்ளியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மஞ்சளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நேற்று நிறைவடைந்தது. அதில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் தேரில் அமர்ந்தபடி, முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் மஞ்சள் நீர், வண்ணப்பொடிகளை துாவி ஆடியபடி சென்று, கோவிலில் நிறைவு செய்தனர்.
வரலட்சுமி பூஜை
ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், பவுர்ணமி, திருவோண நட்சத்திரம் என அனைத்தும் ஒன்றாக வந்ததால், மிக
விசேஷமான நாளாக நேற்று கருதப்பட்டது. வரலட்சுமி பூஜையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில், வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, வாழைக்கன்றுகள் கட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. திருமணமான சுமங்கலி பெண்கள், வீட்டில், வரலட்சுமி பூஜை செய்தனர். கும்பத்தின் மீது அம்மனின் முகம் செய்து வைத்து, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, பொங்கல், பழங்கள் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர். பூஜையில் வைத்த மஞ்சள் சரடை, கையில் கட்டிக்கொண்டனர்.
திருவிளக்கு பூஜை
ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளி, வரலட்சுமி பூஜையொட்டி, ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு, திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர். முன்னதாக, துர்க்கை அம்மனுக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது. பின் சந்தன காப்பு, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.