/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டிலில் படுத்தவாறு மறியல் வீட்டுமனையை மீட்ட மூதாட்டி
/
கட்டிலில் படுத்தவாறு மறியல் வீட்டுமனையை மீட்ட மூதாட்டி
கட்டிலில் படுத்தவாறு மறியல் வீட்டுமனையை மீட்ட மூதாட்டி
கட்டிலில் படுத்தவாறு மறியல் வீட்டுமனையை மீட்ட மூதாட்டி
ADDED : ஆக 10, 2025 01:39 AM

மேட்டூர்:மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில், கட்டிலை போட்டு படுத்தபடி, 80 வயது மூதாட்டி மறியலில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சு நடத்தி, அவருக்கு அரசு வழங்கிய வீட்டுமனையை மீட்டுக்கொடுத்தனர்.
சேலம் மாவட்டம், கிழக்கு காவேரிபுரத்தை சேர்ந்தவர் ராஜா; கூலித்தொழிலாளி. இவரது தந்தை குப்புசாமி, தாய் சரசு, 80. குப்புசாமி உட்பட சிலர், வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு 25 ஆண்டுக்கு முன் அரசு சார்பில் தலா, 2 சென்ட் நிலம் வழங்கப்பட்டது.
குப்புசாமி இறந்த நிலையில், சரசு, குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, சில ஆண்டுகள் அங்கு வசித்தார். பின், மீண்டும் கிழக்கு காவேரிபுரம் வந்து பார்த்தபோது, அரசு வழங்கிய நிலத்தை, அருகே வசிக்கும் பழனியம்மாள், அவரது மகன்கள் ஆக்கிரமித்தது தெரிந்தது.
நிலத்தை கேட்டபோது, வழங்க மறுத்து விரட்டியுள்ளனர். இதனால், காவேரிபுரம் பஸ் ஸ்டாப்பில் வசித்த அவர், அரசு வழங்கிய நிலத்தை பிரித்து வழங்கக்கோரி, வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் பலனில்லை.
பாதிக்கப்பட்ட சரசு, அவரது உறவினர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு, காவேரிபுரத்தில், மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி சரசுவால் நடக்க முடியாது என்பதால், நடுரோட்டில் கட்டிலை போட்டு, அவரை படுக்க வைத்தனர்.
மேட் டூர் தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், கொளத்துார் போலீசார் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து, கிழக்கு காவேரிபுரம் சென்று, பழனியம்மாள் ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு, சரசுவிடம் ஒப் படைத்தனர்.
மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

