/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 பேரை விரட்டி பிடித்த போலீஸ் புகையிலை கடத்தல் கும்பலா?
/
2 பேரை விரட்டி பிடித்த போலீஸ் புகையிலை கடத்தல் கும்பலா?
2 பேரை விரட்டி பிடித்த போலீஸ் புகையிலை கடத்தல் கும்பலா?
2 பேரை விரட்டி பிடித்த போலீஸ் புகையிலை கடத்தல் கும்பலா?
ADDED : ஆக 21, 2025 02:28 AM
ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், அரூர் சாலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு ஆச்சாங்குட்டப்பட்டி அருகே, குஜராத் மாநில பதிவெண் கொண்ட, 'ஸ்கார்பியோ' காரை வட மாநிலத்தவர், வேகமாக ஓட்டிச்சென்றனர். காருக்கு மேல் ஒருவர் இருந்தார். அப்போது நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில், பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜா, அந்த வாகனத்தை நிறுத்தினார். ஆனால் நிற்காமல் கார் அதிவேகமாக சென்றது.
ஆச்சாங்குட்டப்பட்டி செக்போஸ்டில் தகவல் கொடுத்து, அந்த காரை தடுத்து நிறுத்திய போதும் அங்கும் நிற்காமல், இடதுபுறம் திரும்பி, மூக்கனுாருக்கு சென்றது. அப்போது மக்கள், காரை நிறுத்தி பிடிக்க முயன்றபோது, சேலம் நோக்கி திரும்பிச்சென்றனர். பின் குப்பனுார் பிரிவு சாலை அருகே, போலீசார் சாலையில் லாரியை நிறுத்தி வாகனத்தை பிடிக்க முயன்றனர். ஆனால் காரை ஓட்டி வந்தவர்கள் குப்பனுார் வழியே ஏற்காட்டுக்கு செல்லும் மலைப்பாதையில் திரும்பி சென்றனர்.
அவர்களை, வீராணம் பெட்ரோல் போலீசார் விரட்டிச்சென்றனர். ஏற்காடு, கொட்டச்சேடு பஸ் ஸ்டாப் அருகே, சரக்கு வாகனம், சாலையின் குறுக்கே நிறுத்தி காரை தடுத்து நிறுத்த போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்படி சரக்கு வாகனத்தை நிறுத்தி தடுத்தபோது, அவர்கள் அந்த வாகனத்தை இடித்ததில், காரின் முன்புறம் சேதமடைந்தது. இதனால், 200 மீட்டருக்கு சென்ற நிலையில், காரை இயக்க முடியாததால், வடமாநிலத்தவர்கள் இருவரும், சாலையில் நிறுத்திவிட்டு, அருகே இருந்த தோட்டத்தில் புகுந்து தப்பி ஓடினர்.
இதை அறிந்து ஏற்காடு மற்றும் வீராணம் போலீசார், ஊர்மக்கள் உதவியுடன் தோட்டத்தில் புகுந்து தேடி, இருவரையும் சுற்றிவளைத்தனர். விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த, அர்ஜூன் சிங், 24, சுரேஷ், 23, என தெரிந்தது. அவர்கள் விட்டுச்சென்ற காரை ஆய்வு செய்ததில், அதன் பின்புறம் உள்ள சீட் கழற்றப்பட்டிருந்தது. ஒரு சரம் புகையிலை பாக்கெட் கிடந்தது. தொடர்ந்து காரை, வீராணம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று புகையிலை கடத்தல் கும்பலா என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அந்த கார், கொட்டச்சேடு பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த செந்திட்டு கிராமத்தை சேர்ந்த, தற்காலிக துாய்மை பணியாளர் தனலட்சுமி மீது மோதி விட்டு சென்றதும் தெரிந்தது. அவர், மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.