/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதான வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை; சொத்து ஆவணங்கள், முக்கிய டைரி சிக்கின
/
கைதான வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை; சொத்து ஆவணங்கள், முக்கிய டைரி சிக்கின
கைதான வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை; சொத்து ஆவணங்கள், முக்கிய டைரி சிக்கின
கைதான வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை; சொத்து ஆவணங்கள், முக்கிய டைரி சிக்கின
ADDED : அக் 09, 2024 06:38 AM
சேலம்: சேலம், கந்தம்பட்டி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், 58. இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முயன்ற சம்பவத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சேலத்தில், 3 ஆண்டு பணி நிறைவு செய்த நிலையில் அவர் மீது, அடிக்கடி லஞ்ச புகார் எழுந்தது. அதனால், 25 நாட்கள் விடுமுறையில் சென்றவர், இடமாறுதல் பெற முயற்சித்துள்ளார். இதனிடையே கடந்த, 23ல் ஆத்துார், 25ல் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனை, சதாசிவத்துக்கு கிலியை ஏற்படுத்தியது. இதனால் பணிக்கு திரும்பியவர், லஞ்ச வழக்கில் சிக்காமல் இருக்க பேரம் பேசி பணம் கொடுத்தபோது சிக்கிக்கொண்டார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில், 6 பேர் அடங்கிய குழுவினர், நேற்று சதாசிவம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த முரங்கம், வேதபிரியன்காட்டில் உள்ள சதாசிவம் வீட்டில், காலை, 8:00 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு, 8:00 மணி வரை நடந்தது. இதில், 2 லட்சம் ரூபாயுடன், ஏராளமான சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். குறிப்பாக இவருக்கு, 5 புரோக்கர்கள், அன்றாடம் வசூலித்து கொடுக்கும் லஞ்சப்பணத்தின் பட்டியல் அடங்கிய முக்கிய டைரி சிக்கியுள்ளது. அதில் யார், யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெறப்பட்டது, வார, மாத மொத்த லஞ்ச வருமான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவே மாதம் பல லட்சங்களை தாண்டும் என, போலீசார் தெரிவித்தனர். அத்துடன் சதாசிவத்துக்கு சொந்தமான, 60,000 கோழிகள் வளர்த்து வரும் பண்ணையிலும் சோதனை மேற்கொண்டனர். இதனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

