/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலப்பிரச்னையில் தம்பதி மீது தாக்கு
/
நிலப்பிரச்னையில் தம்பதி மீது தாக்கு
ADDED : மார் 15, 2024 03:55 AM
தலைவாசல்: நிலப்பிரச்னையில் தம்பதி மீது தாக்குதல் நடத்தியதாக, தி.மு.க., ஒன்றிய செயலர், அவரது மனைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரை சேர்ந்த, விவசாயி ராஜேந்திரன், 67. அதே பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்கிறார். அந்த நிலத்தில் பங்கு உள்ளதாக, அவரது உறவினரான, தி.மு.க.,வை சேர்ந்த, தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலர் பாலமுருகன், அவரது குடும்பத்தினர், கொலை மிரட்டல் விடுப்பதாக, 2023ல் சேலம் எஸ்.பி., - தலைவாசல் போலீசில், ராஜேந்திரன் புகாரளித்தார்.
தட்டிக்கேட்டார்
நேற்று பாலமுருகன், அவரது ஆதரவாளர்களுடன், நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு வந்தபோது, தட்டிக்கேட்ட ராஜேந்திரன், அவரது மனைவி லட்சுமி, 60, ஆகியோரை தாக்கியதாக கூறி, தம்பதியர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், பாலமுருகன் மனைவி ராஜாமணி, 42, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டர் சேதம்
ராஜேந்திரன் கூறுகையில், ''பெற்றோர் வழங்கிய நிலத்தில் பயிர் செய்து வருகிறேன். அதில் பங்கு உள்ளதாக, உறவினர் பாலமுருகன் கூறி தகராறு செய்து வருகிறார். இன்று(நேற்று), பாலமுருகன் சில ஆட்களுடன் வந்து, டிராக்டரை சேதப்படுத்தி, மக்காச்சோளம் நடவு செய்தார். அதை தடுத்தபோது எங்களை தாக்கினார். தி.மு.க., நிர்வாகியாக அவர் உள்ளதால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. அளக்க தயாராக இருந்தாலும், நிலத்தை ஒப்படைக்கும்படி மிரட்டி வருகிறார்,''
என்றார்.
பொய் புகார்
பாலமுருகன் கூறுகையில், ''ராஜேந்திரன் பயன்படுத்தும் நிலத்தில் எனக்கு இடம் உள்ளது. மனு அளித்தபோதும், அவர் அளப்பதற்கு விடுவதில்லை. நான் யாரையும் அடிக்கவில்லை. அவர்களாகவே விழுந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதனால் என் மனைவியும் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரை வைத்து மிரட்டவில்லை. பொய் புகார் கூறி வருகின்றனர்,''
என்றனர்.

