/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல்; பெண் உட்பட மூவர் கைது
/
எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல்; பெண் உட்பட மூவர் கைது
ADDED : நவ 04, 2024 11:10 PM
பள்ளப்பட்டி ; சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் அதிகளவில் பயணியர் கூடியதால், நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இரவு, 9:00 மணிக்கு ஆண்டிப்பட்டியை சேர்ந்த குடும்பத்தினர், த.வெ.க., கட்சி கொடி கட்டிய காரில் மேம்பாலம் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். போலீசார், காரில் உள்ளே வர வேண்டாம் என தெரிவித்த போதும், மீறி வந்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த பள்ளப்பட்டி எஸ்.எஸ்.ஐ., சரவணவேலன், கார் டிரைவரை கண்டித்துள்ளார். அப்போது காரில் இருந்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரில் இருந்த ஒருவரை, எஸ்.எஸ்.ஐ., சரவணவேலன் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் பேச்சு நடத்திய நிலையில், காரில் இருந்த பெண், எஸ்.எஸ்.ஐ., சரவணவேலனை, செருப்பால் அடித்துள்ளார். இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ.,யை அடித்த கமலேஸ்வரி, 35, அவரது உறவினர்கள் கார்த்திக், 43, ஹரிகிருஷ்ணன், 28, ஆகியோரை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.