/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
/
உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 30, 2025 02:13 AM
சேலம், உலக இருதய தினத்தையொட்டி, நேற்று சேலம் அரசு மருத்துவமனை இருதயத்துறை சார்பில் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மருத்துவமனை டீன் தேவி மீனாள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டீன் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் உடல் பருமனை குறைப்போம், இருதயத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட தட்டிகளை ஏந்தியபடி, மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று மீண்டும் டீன் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
பின்னர், இருதய பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதில், இருதய மருத்துவத்துறை தலைவர் கண்ணன் பேசியதாவது:
ஆண்டுதோறும், 1.7 கோடி பேர் இருதய நோயால் உயிரிழக்கின்றனர். மேலும் பக்கவாதம், மாரடைப்பு, இருதய கரோனரி உள்ளிட்ட கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், சர்க்கரை நோய், உடற்பயிற்சி செய்யாதது போன்றவை இருதய நோய் வருவதற்கான முக்கிய காரணம்.
குறிப்பாக வெள்ளை சர்க்கரை, உப்பு அளவை குறைக்க வேண்டும். கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 7 மணி நேரம் துாக்கம் அவசியம். சேலம் மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவில் ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், டாக்டர்கள் சுரேஷ்கண்ணா, சரவண பாபு, சுரேஷ் பிரபு, தீபன், வீரமணி, சவிதா, ஸ்ரீநித்யா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.